குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்

குடும்பத்தகராறு காரணமாக திருப்பூர் சாமுண்டிபுரத்தில் 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு, தானும் அதனை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-08-29 22:45 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வில்பிரட் (வயது 30). இவர் அந்த பகுதியில் பிரிண்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த புனிதா (28) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு எவலின் (7) என்ற மகளும், எவின் (1½) என்ற மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் சந்தோ‌ஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கை திடீரென திசைமாறியது. வில்பிரட்டிற்கும், புனிதாவிற்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கணவன்–மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையே நேற்று முன்தினமும் கணவன்–மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வில்பிரட் வெளியே சென்று விட்டார். இதனால் மனமுடைந்த புனிதா குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி எவலின், எவின் ஆகிய 2 குழந்தைகளுக்கும் சாணிபவுடர் (வி‌ஷம்) தண்ணீரில் கலந்துகொடுத்து குடிக்க வைத்தார்.

அதன் பின்னர் அந்த வி‌ஷத்தை புனிதாவும் குடித்தார். பின்னர் இது குறித்து தனது கணவர் வில்பிரட்டிற்கு செல்போனில் வி‌ஷம் குடித்து விட்டதாக தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் விரைந்து வீட்டிற்கு வந்தார். அப்போது புனிதா உள்பட 3 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மீட்டு, திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து 3 பேரும் தற்போது இயல்பு நிலைக்கு வந்துள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு, தானும் தற்கொலை செய்ய வேண்டும் என வி‌ஷம் குடித்தாரா?. அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்