கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பர் 21-ந்தேதி அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம்

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 21-ந்தேதி அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் செந்தில் தெரிவித்தார்.;

Update: 2018-08-29 22:45 GMT
பெரம்பலூர்,

மத்திய அரசு, டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பணப்படிகளுக்கு இணையாக தமிழ்நாடு அரசு அனைத்து டாக்டர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த கோரிக்கையை குறித்த விளக்க கூட்டம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மகாலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமை வகித்து பேசினார். துணைத்தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் டாக்டர் அர்ச்சுனன், செயலாளர் டாக்டர் ரமேஷ் மற்றும் அந்த கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த டாக்டர்களும் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் செந்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு, டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பணப்படிகளுக்கு இணையாக தமிழ்நாடு அரசு அனைத்து டாக்டர்களுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஏற்கனவே சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள அரசு டாக்டர்கள் மாவட்ட அளவில் தர்ணா போராட்டமும், கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலத்தை நடத்தினர். கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந்தேதி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி டாக்டர்கள் பேரணியும் நடத்தவுள்ளோம். அப்படியும் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லையென்றால் செப்டம்பர் 21-ந்தேதி எந்தவித சிகிச்சை பணிகளிலும் ஈடுபடாமல் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.

மேலும் செய்திகள்