சுரங்கப்பாதை அமைக்கும் பணியால் பாதிப்பு: காட்பாடி பயணிகள் ரெயிலை மறித்து 3 கிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணியால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் காட்பாடி பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-29 23:00 GMT

விழுப்புரம்,

தமிழகம் முழுவதும் ஆளில்லாத ரெயில்வே கேட்டுகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விதமாக, ரெயில்வே நிர்வாகம் ஆளில்லா ரெயில்வே கேட்டுகளை மூடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. விழுப்புரம் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் இருந்த 2 ஆளில்லாத ரெயில்வே கேட்டுகளை கடந்த ஓராண்டுக்கு முன்பு ரெயில்வே நிர்வாகத்தினர் மூடிவிட்டனர்.

இதில் ஒரு ரெயில்வே கேட் அமைந்த இடத்தில், கிராம மக்கள் பயன்பெறும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 6 மாதமாக நடந்து வரும் இந்த பணியில் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக தெரிகிறது.

இதன் காரணமாக, கொத்தமங்கலம், வெண்மணியாத்தூர், கப்பூர் ஆகிய கிராமங்களை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கிராமத்தில் இருந்து வெளியே எளிதில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில் இந்த பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், நீண்ட தூரம் நடந்து தான் கோனூர், விழுப்புரத்துக்கு சென்று வர முடியும்.

இதில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்லவும் சத்திப்பட்டு, தோகைப்பாடி, பெரும்பாக்கம் வழியாக சுமார் 8 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு விழுப்புரம் சென்று வருகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள இந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கொத்தமங்கலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், அதுவரையில் அந்த பகுதியில் மூடப்பட்டுள்ள மற்றொரு ரெயில்வே கேட்டை தற்காலிகமாக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் திருச்சி கோட்ட ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு கொத்தமங்கலம், வெண்மணியாத்தூர், கப்பூர் ஆகிய கிராம மக்கள் கோரிக்கை மனுவையும் அனுப்பி உள்ளனர். இருப்பினும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் தற்போது பெய்த மழையால், ரெயில்வே சுரங்கபாதை பணி நடந்து வரும் இடத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக கிராம மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த கொத்தமங்கலம், வெண்மணியாத்தூர், கப்பூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் ரெயில் மறியலில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று காலை 8 மணிக்கு கொத்தமங்கலம் ரெயில்வே கேட் அருகே 3 கிராமங்களை சேர்ந்த மக்களும் ஒன்று திரண்டனர். அப்போது அந்த வழியாக காட்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது.

இதையடுத்து, அந்த ரெயிலை நடுவழியில் நிறுத்துவதற்காக கிராம மக்களில் சிலர் சிவப்பு நிற துணியை காண்பித்தனர். இதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர், ஏதோ பிரச்சினை என்று நினைத்து ரெயிலை உடனடியாக நிறுத்தினார்.

தொடர்ந்து கிராம மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் தான், போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தான், கிராம மக்கள் ரெயிலை சிவப்பு நிற துணியை காண்பித்து நிறுத்தி இருப்பது ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்குமாறும், அதுவரை மூடப்பட்ட மற்றொரு ஆளில்லா ரெயில்வே கேட்டை திறந்து வட வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காணை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காமராஜ், சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுசம்பந்தமாக திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் மாற்றுப்பாதை வசதிக்கு ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதை தொடர்ந்து ½ மணி நேரம் தாமதமாக பயணிகள் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அவதியடைந்தனர். இந்த போராட்டத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, இன்னும் ஒரு வாரத்திற்குள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். இல்லையெனில் மீண்டும் ரெயிலை மறித்து தொடர் போராட்டம் நடத்துவோம் என்று 3 கிராம மக்கள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்