ஊட்டி– ஆடாசோலை சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன, அதிகாரிகள் அப்புறப்படுத்த கோரிக்கை

ஊட்டி– ஆடாசோலை சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனை நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-08-29 23:00 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி–ஆடாசோலை சாலை ஊட்டி நகராட்சிக்கு சொந்தமானது ஆகும். எப்பநாடு, அணிக்கொரை, சின்னக்குன்னூர், தேனாடுகம்பை, கடநாடு, கரகல், மரகல் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஊட்டியில் இருந்து கிராமங்களுக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்த கேரட், பீட்ரூட் போன்ற மலைக்காய்கறிகளை சரக்கு வாகனம் மற்றும் லாரிகளில் ஏற்றி ஊட்டி–ஆடாசோலை சாலை வழியாக விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள். மேலும் குறிப்பிட்ட நேரங்களில் அரசு பஸ்கள் கிராமங்களுக்கு சென்று வருகின்றன. ஊட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன. சாலையில் அங்கும், இங்குமாக பாறைகள் சிதறி கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:–

ஊட்டியில் மழை தீவிரமடையும் போது சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் ஊட்டி–ஆடாசோலை சாலையில் பல இடங்களில் விவசாய விளைநிலங்களில் இருந்து அடித்து வரப்பட்ட மண் படிந்து கிடந்தது. இதனால் சாலை இருப்பதே தெரியாத வகையில் காணப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது செலவில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் சாலையில் படிந்த கிடந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள். மேலும் சாலையோரம் இருந்த புதர்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் தற்போது மழை காரணமாக சாலையின் குறுக்கே பாறைகள் விழுந்து கிடக்கின்றன. அதன் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் கடந்து செல்கிறார்கள். பாறை விழுந்த பகுதியில் மேலும் பெரிய பாறையில் விரிசல் ஏற்பட்டு விழும் அபாயத்தில் உள்ளது. மேலும் அங்குள்ள மரங்களும் விழக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. எனவே சாலையில் விழுந்த பாறைகளை நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்