கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து வாலிபர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்

கோவை அரசு ஆஸ்பத்திரிக்குள் குழந்தை கடத்தல்காரர்கள் சுற்றித்திரிவதாக சந்தேகம் அடைந்து 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2018-08-29 23:30 GMT

கோவை,

கோவை அரசு ஆஸ்பத்திரியின் புதிய கட்டிடத்தில் 3–வது மாடியில் குழந்தைகள் நலப்பிரிவு உள்ளது. இந்த வார்டு பகுதியில் நேற்று காலை 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருந்தனர். அவர்கள் அங்கும் இங்குமாக சிறிது தூரம் சுற்றித்திரிந்ததால் இருவரின் நடவடிக்கையில் அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இருவரும் குழந்தைகளை கடத்த வந்திருப்பதாக வார்டில் இருந்தவர்கள் கருதினர். இதையடுத்து 2 வாலிபர்களையும் மடக்கிப்பிடித்து அவர்களிடம் நீங்கள் யார்? இங்கு உங்களது உறவினர்கள் யார் தங்கியிருக்கிறார்கள்? எதற்காக இங்கு சுற்றுகிறீர்கள்? என கேட்டனர்.

அதற்கு இருவாலிபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதுகுறித்து பொதுமக்கள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்ற போலீசார் 2 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பிடிபட்ட வாலிபர்கள் மதுரையை சேர்ந்த கார்த்திக் (வயது 25), வடவள்ளியை சேர்ந்த ஆண்ட்ரூஸ்(27) என்பது தெரியவந்தது. 2 பேரும் போதை பழக்கத்தினால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. எதற்காக ஆஸ்பத்திரிக்குள் சுற்றினர்? என போலீசார் கேட்டபோது, உரிய பதிலை அவர்கள் கூறவில்லை. 2 வாலிபர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் வார்டுகளுக்குள் நோயாளிகளின் உறவினர்கள் என்று பலரும் நுழைந்து விடுகிறார்கள். வாகன திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களும், நோயாளிகளின் உறவினர்களிடம் திருட்டு சம்பவங்களும் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெறுகிறது.

குழந்தைகள் வார்டு பகுதிகளிலும் மர்ம ஆசாமிகள் சுற்றித்திரிகிறார்கள். ஆஸ்பத்திரி நிர்வாகம் நியமித்துள்ள காவலாளிகள் உரிய கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சந்தேகப்படும் ஆசாமிகளை பிடித்து போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்தனர்.

மேலும் செய்திகள்