துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் பொதுக்கூட்டம் 1-ந் தேதி நடைபெறும் அமைச்சர் பேட்டி

மன்னார்குடியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி 1-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெறும் என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

Update: 2018-08-29 22:45 GMT
சுந்தரக்கோட்டை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா சட்டப்போராட்டத்தின் வாயிலாக காவிரி பிரச்சினையில் பெற்ற வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செப்டம்பர் 1-ந் தேதி(சனிக்கிழமை) மாலை பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த கூட்டம் நடைபெறும். இதில் எந்த மாற்றமும் கிடையாது.

நெல்லையில் பூலித்தேவன் பிறந்த நாள் நிகழ்ச்சியில் செப்டம்பர் 1-ந் தேதி காலையில் துணை முதல்-அமைச்சர் கலந்து கொண்டு விட்டு அன்று மாலை இங்கு வருவதற்கு நேரம் ஆகும் என்பதால் ஒருநாள் தள்ளி நடத்தலாமா என்ற யோசனை இருந்தது. ஆனால் துணை முதல்-அமைச்சர், எவ்வளவு சிரமப்பட்டாலும் நான் மன்னார்குடி கூட்டத்திற்கு வந்து விடுவேன் என உறுதியாக கூறிவிட்டார். ஆதலால் செப்டம்பர் 1-ந் தேதி(சனிக்கிழமை) மாலை திட்டமிட்டபடி பொதுக்கூட்டம்நடைபெறும்.

முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் அரசு, விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் அரசாக செயல்படும். குறுவை சாகுபடி தொகுப்பு மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடி பணி தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறும் மன்னார்குடி தேரடியில் நடைபெற்று வரும் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டார்.

அமைச்சருடன் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், தொகுதி செயலாளர் கலிய பெருமாள், சேரன்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் மனோகரன், மன்னார்குடி கூட்டுறவு நகர வங்கி தலைவர் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்