ஊழியர் தாமதமாக வந்ததால் ரே‌ஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஊழியர் தாமதமாக வந்ததால் திருப்பூர் நொய்யல் வீதியில் ரே‌ஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-29 23:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் நொய்யல் வீதியில் ஒரு ரே‌ஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரே‌ஷன் கடையில் அந்த பகுதியை சேர்ந்த 800–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ரே‌ஷன் கடையில் பொருட்கள் சரியாக வினியோகம் செய்யவில்லை என தெரிகிறது.

மேலும், இந்த ரே‌ஷன் கடையில் பொருட்கள் வினியோகம் செய்யும் ஊழியர்கள் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அருகில் உள்ள மசூதி தெருவில் உள்ள ரே‌ஷன் கடைக்கும் சென்று பொருட்கள் வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை நொய்யல் வீதியில் உள்ள ரே‌ஷன் கடையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் காத்திருந்தனர்.

ஆனால் ரே‌ஷன் கடை ஊழியர்கள் தாமதமாக வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரே‌ஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து ஊழியர்களை கூடுதலாக நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும், ரே‌ஷன் கடை முன்பு அந்த பகுதியில் இறைச்சி விற்பனை செய்பவர்கள் ஆடு, மாடுகளை கட்டி வைக்கின்றனர். இதனால் இடையூறு ஏற்படுவதாகவும், இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்