நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறும் - டி.டி.வி. தினகரன் நம்பிக்கை

வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2018-08-29 23:30 GMT

தேவகோட்டை,

தேவகோட்டையை அடுத்த இறகுசேரியில் உள்ள மாநில இளைஞரணி இணைச் செயலாளர் முருகன் இல்ல விழாவில் கலந்துகொண்ட டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் எனக்கு கூடும் கூட்டத்தை பார்த்து, ஒரே கூட்டத்தில் கலந்துகொள்பவர்களை வேறு கூட்டங்களுக்கு அழைத்து செல்கிறார்கள் என்று உளவுத்துறை தவறான தகவல்களை கூறி வருகின்றனர். சர்க்கஸ் கூடாரம் போன்று மக்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு கூட்டம் கூட்டுவது என்பது அவர்களின் ஆசையாக இருக்கும். அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் என்னை அ.தி.மு.வின் வில்லன் என்று கூறுகிறார். எனது போட்டோவையும், அவரது போட்டோவையும் வைத்து ஒப்பிட்டு பாருங்கள். இதில் யார் முகம் வில்லன் மாதிரி இருக்கிறது என்று தெரியும். அ.தி.மு.க.வினர் எங்களை வில்லன் என்று கூறுகின்றனர். பின்னர் எப்படி நாங்கள் அவர்களுடன் பேசமுடியும். அவர்கள் யாரும் எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அமைச்சர்கள் யாரும் வரமாட்டார்கள். பொதுச்செயலாளருக்கும், கட்சிக்கும் துரோகம் செய்தவர்கள் வரமாட்டார்கள். தொண்டர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் வருவது குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் எங்கள் பக்கம் அவர்கள் வந்துவிடுவார்கள்.

தேர்தல் வரும்போது மட்டுமே யாருடன் கூட்டணி வைப்பது என்பது தெரியவரும். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தோடு சென்று கலைஞரின் நினைவிடத்தை அண்ணாவிற்கு அருகில் வேண்டும் என்பது கேட்டதே தவறு. கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபோது இதே மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்–அமைச்சர் காமராஜருக்கு இடம் இல்லை என்று கூறினார். பின்னர் எப்படி கருணாநிதிக்கு இடம் கொடுப்பார்கள். ஸ்டாலின் தனது குடும்பத்தோடு முதல்–அமைச்சர் பழனிச்சாமியிடம் கருணாநிதிக்கு இடம் கேட்டது தலைமை பண்பான செயல் அல்ல. எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். வருகிற பாராளுமன்ற தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் வெற்றி எங்களுக்கே.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்