தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த ரெயில்களால் பரபரப்பு பெரும் விபத்து தவிர்ப்பு

தண்டவாளத்தில் இரு ரெயில்கள் எதிர் எதிரே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ரெயில்கள் பெரும் விபத்தில் இருந்து தப்பின.

Update: 2018-08-28 23:30 GMT
மும்பை, 

தண்டவாளத்தில் இரு ரெயில்கள் எதிர் எதிரே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ரெயில்கள் பெரும் விபத்தில் இருந்து தப்பின.

எதிர் எதிரே வந்தன

நாகர்கோவிலில் இருந்து நேற்று முன்தினம் காலை மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் நேற்று மாலை புனே பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது புனேயில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயிலும், எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்தன.

இதை கவனித்த எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் டிரைவரும், மின்சார ரெயில் மோட்டார் மேனும் ரெயில்களை அவசர பிரேக் போட்டு நிறுத்தினர். இதனால் சுமார் 10 மீட்டர் இடைவெளியில் 2 ரெயில்களும் மோதாமல் நின்றன. இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விசாரணை நடத்தப்படும்

ரெயில் என்ஜின் டிரைவர், மோட்டார் மேன் ஒரே வழித்தடத்தில் ரெயில்கள் வருவதை கவனித்ததாலும், ரெயில்கள் மெதுவாக சென்று கொண்டு இருந்ததாலும் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக பயணிகள் கூறினர். எனினும் இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் சுமார் 30 நிமிட தாமதத்திற்கு பிறகு எக்ஸ்பிரஸ் ரெயில் புனேயில் இருந்து புறப்பட்டு மும்பை வந்தது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்