நெல்லையில் பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்த முயற்சி சமாதானம் செய்த அதிகாரிகள்
நெல்லையில் பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.;
நெல்லை,
நெல்லையில் பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
பாரதீய ஜனதா கட்சி
நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பஸ் நிறுத்தத்தின் அருகில் சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் போராட்டம் நடத்த முடிவு செய்து இருந்தனர்.
இதற்காக மாவட்ட மகளிர் அணி தலைவர் கமலா தலைமையில் பாரதீய ஜனதா கட்சியினர் கழிப்பறை கோப்பைகளுடன் நேற்று நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகில் திரண்டு நின்றனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால் நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா, சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டத்துக்கு திரண்டு இருந்த பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், மகளிர் அணி துணை தலைவர் தீபா, மகளிர் அணி பொதுச்செயலாளர் கனிஅமுதா ஆகியோருடன் உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் மற்றும் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்துக்குள் சுகாதார வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.