பாரம்பரிய மீனவர்கள், 3-ந் தேதி கடலுக்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டம் விசைப்படகுகளில் மீன்பிடிக்க எதிர்ப்பு
வருகிற 3-ந் தேதி படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி, கடலுக்கு செல்லாமல் புறக்கணிக்க நாட்டு படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி அனைத்து பாரம்பரிய மீனவர்களும் வருகிற 3-ந் தேதி படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி, கடலுக்கு செல்லாமல் புறக்கணிக்க நாட்டு படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டுப்படகு மீனவர்கள்
தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்க கூட்டம், திருச்செந்தூர் ஜீவாநகரில் நடந்தது. சங்க தலைவர் கயஸ் தலைமை தாங்கினார். ஜீவா நகர் மீனவர் கமிட்டி தலைவர் பிச்சையா முன்னிலை வகித்தார். இதில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான கிராம பாரம்பரிய மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பதிவு செய்யாத விசைப்படகுகள், சட்ட விரோதமாக மீன்பிடிப்பதால் பாரம்பரிய மீனவர்களின் பல கோடி மதிப்புள்ள வலைகள் சேதம் அடைந்து, சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே அவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது. சட்டப்படி அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர் தான் பதிவு செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 3-ந்தேதி(திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்ட அனைத்து பாரம்பரிய மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் புறக்கணித்து, தங்களின் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி, அந்தந்த கிராமங்களில் மீன்பிடி சட்டங்கள் பற்றி விளக்கமளிக்க வேண்டும்.
கிராமசபை கூட்டம்
கல்லாமொழி கடல்பகுதியை அழிக்கக்கூடிய நிலக்கரி இறங்குதளம் அமைக்க முயற்சிப்பதை தடுக்க அனைத்து கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்களை சந்தித்து ஆதரவு பெற வேண்டும். முறையான அனுமதி பெற்று விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். வருகிற 17.9.2018 அன்று மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கல்லாமொழி கடல் பகுதிக்கு படகுகளுடன் வந்து நமது ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டும்.
வருகிற 2.10.2018 அன்று நடக்க உள்ள கிராம சபை கூட்டத்தில் அனைத்து மீனவ கிராம மக்களும் கலந்து கொண்டு, நிலக்கரி இறங்குதளம் அமைக்க நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், மீனவ மக்கள் பலர் கலந்து கொண்டனர்.