சொத்தை எழுதி கொடுக்காததால் ஆத்திரம் தந்தையின் கண்விழியை விரலால் தோண்டி எடுத்த கொடூரம்
பெங்களூருவில், சொத்தை எழுதி கொடுக்காததால் ஆத்திரமடைந்து தந்தையின் கண்விழியை விரலால் தோண்டி எடுத்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூருவில், சொத்தை எழுதி கொடுக்காததால் ஆத்திரமடைந்து தந்தையின் கண்விழியை விரலால் தோண்டி எடுத்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சொத்து பிரச்சினை
பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சகாம்பரி நகரில் வசித்து வருபவர் பரமேஸ் (வயது 65). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மனைவி வசந்தி. இந்த தம்பதிக்கு சந்தன், சேத்தன் என்று 2 மகன்கள் உள்ளனர். சந்தன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி தனியாக வசித்து வருகிறார். சேத்தன் தொழில்அதிபராக இருக்கிறார். இவர், ஊதுபத்தி தயாரித்து மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
பரமேஸ் தனக்கு சொந்தமான வீட்டின் முதல் மாடியில் மனைவி வசந்தியுடன் வசித்து வந்தார். தரைதளத்தில் சேத்தன் மட்டும் வசித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உடல் நலக்குறைவால் வசந்தி இறந்து போனார். இதன் தொடர்ச்சியாக, பரமேசின் பெயரில் உள்ள சொத்துகளை தனது பெயருக்கு எழுதி கொடுக்க வேண்டும் என்று சேத்தன், தந்தை பரமேசிடம் கேட்டு வந்துள்ளார். இதற்கு பரமேஸ் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.
கண்விழியை விரலால் தோண்டி
இந்த நிலையில், சொத்து பிரித்து கொடுப்பது தொடர்பாக பரமேசுக்கு, சேத்தன் வக்கீல் நோட்டீசு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. நோட்டீசில், சொத்தை பிரித்து கொடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த நோட்டீசை நேற்று பெற்ற பரமேஸ், சேத்தனிடம் சென்று ‘நேரம் வரும்போது சொத்துகளை உன் பெயருக்கு எழுதி வைக்கிறேன். இப்போது சொத்துகளை எழுதி கொடுக்க முடியாது‘ என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சேத்தன், தந்தை பரமேசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு அஞ்சாத பரமேஸ் வீட்டில் இருந்து வெளியேறி முதல் தளத்துக்கு சென்றுள்ளார். இந்த வேளையில், அங்கு சென்ற சேத்தன், பரமேசின் கண்களை விரலால் தோண்டினார். இதனால் பரமேசியின் ஒரு கண்ணில் இருந்த கருவிழி கீழே விழுந்தது. இன்னொரு கண்ணில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனால் பரமேஸ் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.
கைது
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் சேத்தனை பிடித்து வைத்து கொண்டதோடு, பரமேசை மீட்டு அருகே உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இருப்பினும், பரமேசுக்கு மீண்டும் கண்பார்வை கிடைப்பது கடினம் என்று டாக்டர்கள் கூறினர். தொடர்ச்சியாக அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, பிடிபட்ட சேத்தனை ஜே.பி.நகர் போலீசில் அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர். இதுபற்றி பரமேஸ் கொடுத்த புகாரின் பேரில் ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேத்தனை கைது செய்தனர். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது. சொத்தை எழுதி கொடுக்காததால் ஆத்திரமடைந்து தொழில்அதிபர் ஒருவர் தந்தையின் கண் விழியை விரலால் தோண்டி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.