சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து பட்டாசுகள் மாயமான வழக்கு; 6 பேர் விடுதலை

சிவகாசி அருகே போலீஸ் அதிகாரி முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து பட்டாசு பண்டல்கள் மாயமான வழக்கில் 3 போலீஸ் அதிகாரிகளை கோர்ட்டு விடுதலை செய்தது.

Update: 2018-08-28 22:15 GMT

சிவகாசி,

சிவகாசி ஏ.ஜெ.நகரை சேர்ந்தவர் லோகராஜ். இவருக்கு சொந்தமான குடோனில் உரிய அனுமதியின்றி பட்டாசு பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த 2014–ம் ஆண்டு அப்போதைய சிவகாசி உதவி போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டேவுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் அவர் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்று சோதனை செய்தார். அப்போது அந்த குடோனில் அனுமதியின்றி 3602 பட்டாசு பண்டல்கள் இருப்பு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த குடோனுக்கு அவரது முன்னிலையில் ‘சீல்‘ வைக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த குடோன் சாவி திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் சில வாரங்கள் கழித்து சீல் வைத்த குடோனில் இருந்த பட்டாசு பண்டல்கள் கடத்தப்பட்டதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அவர் குடோனுக்கு சென்று பார்த்த போது 3219 பட்டாசு பண்டல்கள் மாயமானது தெரியவந்தது. இதன் மதிப்பு பல லட்சம் என்று கூறப்பட்டது.

பட்டாசு பண்டல்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக அப்போதைய திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் சீராளன், சப்–இன்ஸ்பெக்டர் திலீபன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோரிடம் உதவி போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

அந்த விசாரணை அறிக்கையை மதுரை டி.ஜ.ஜி. ஆனந்த குமார்சோமானியிடம் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் சீராளன், சப்–இன்ஸ்பெக்டர் திலீபன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டர் சீராளன், சப்–இன்ஸ்பெக்டர் திலீபன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மாரியப்பன், குடோன் உரிமையாளர் லோகராஜ் மற்றும் 2 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சிவகாசிநீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்தனகுமார், குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்