அதிகாரிகள் திடீர் ஆய்வு: நகராட்சி விருந்தினர் மாளிகையில் நாய் வளர்த்து விற்ற காவலாளி

ஊட்டி நகராட்சி விருந்தினர் மாளிகையில் காவலாளி குடும்பத்துடன் தங்கி நாய் வளர்த்து விற்றார். அப்போது ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் கூண்டு மற்றும் பொருட்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2018-08-28 22:45 GMT

ஊட்டி,

தமிழகம் முழுவதும் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி தலைவர்கள், அமைச்சர்கள் ஆய்வு செய்யும் போது ஓய்வெடுக்கும் வகையில் ஓய்வு விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த விடுதிகளில் முக்கிய நபர்களுக்கு கட்டண அடிப்படையில் 2 நாட்கள் மட்டும் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும். அந்த வகையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஊட்டி நகராட்சி விருந்தினர் மாளிகை உள்ளது.

ஆரம்ப காலத்தில் கோவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள் இந்த விருந்தினர் மாளிகையில் தங்கி செல்வார்கள். தொடக்கத்தில் இந்த விருந்தினர் மாளிகையை ஊட்டி நகராட்சி கமி‌ஷனராக இருந்தவர்கள் சுத்தமாகவும், புதுப்பித்தும் வைத்து இருந்தனர்.

சமீபகாலமாக விருந்தினர் மாளிகையில் தணிக்கை செய்ய வரக்கூடிய அலுவலர்கள் மட்டும் ஓரிரு அறைகளில் தங்கி சென்றனர். ஊட்டியில் தனியார் விடுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், ஊட்டிக்கு வருபவர்கள் தனியார் விடுதிகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் தற்போது அந்த மாளிகையின் கீழ்தளம் மோசமாகவும், சுகாதாரம் இல்லாமலும் காணப்படுகிறது.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் விருந்தினர் மாளிகையை அப்பகுதி மக்கள் உயர்தர நாய்களை இனவிருத்தி செய்யும் இடமாக பயன்படுத்தி வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து, ஊட்டி நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) ரவி, சுகாதார அதிகாரி டாக்டர் முரளி சங்கர் மற்றும் அதிகாரிகள் விருந்தினர் மாளிகைக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த வளாகம் சுகாதாரம் இல்லாமலும், உயர்தர நாய்கள் வளர்க்க கூண்டுகள் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இந்த விருந்தினர் மாளிகையின் காவலராக ராஜூ என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு என்று ஒரு அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. ராஜூ தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கியது மட்டுமல்லாமல், விருந்தினர் மாளிகையில் அதிகாரிகள் தங்கும் அறைகளில் பொருட்களை வைத்து தங்கி உள்ளார். அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் தங்கியதுடன், உயர்தர நாய்களை இனவிருத்தி செய்து, அதை வளர்த்து விற்பனை செய்து வந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து விருந்தினர் மாளிகையில் காவலாளியால் வளர்க்கப்பட்டு வந்த உயர்தர நாய்கள் வெளியேற்றப்பட்டன. மேலும் விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள், நாய்கள் வளர்ப்பு கூண்டுகள் நகராட்சி வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன. அங்கு காவலர் ராஜூ மட்டும் தங்க வேண்டும் என்றும், அவரது மனைவி, மகன் தங்கக்கூடாது என்றும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்து எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்