தேசிய அளவிலான போட்டியில் முதலிடம்: நாசாவில் நடைபெறும் கருத்தரங்கில் ஊட்டி மாணவர் பங்கேற்கிறார்

தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த ஊட்டி மாணவர் நாசாவில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கிறார்.

Update: 2018-08-29 00:00 GMT

ஊட்டி,

அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையே தேசிய அளவிலான விண்வெளி அறிவியல் கட்டுரை போட்டி அமெரிக்க நாட்டில் உள்ள நாசாவின் கீழ் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. நான் ஒரு நாசா முதன்மை அதிகாரியாக இருந்தால், செவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரகவாசியை சந்தித்தால், விண்வெளியில் ஒரு நாள், வானவியல் விஞ்ஞானத்தில் பங்களிப்பும், சார்பும் ஆகிய 4 தலைப்புகளின் கீழ் கட்டுரை போட்டி நடந்தது.

இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்க ளது கட்டுரைகளை ஆன்லைன் வழியாக சமர்ப்பித்தனர். அதில் 500 பேரை நாசாவின் துறை தேர்வு செய்தது. பின்னர் 500 பேரில், 300 மாணவர்களின் கட்டுரைகள் நாசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முடிவில் தேசிய அளவிலான விண்வெளி அறிவியல் கட்டுரை போட்டியில் நீலகிரி மாவட்டம் ஊட்டி கிரசன்ட் பள்ளியில் 10–ம் வகுப்பு படிக்கும் மாணவர் கனிஷ்க் முதலிடம் பிடித்தார்.

இந்த நிலையில், நாசாவில் சர்வதேச அளவில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு வருகிற நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் மாணவர் கனிஷ்க் பங்கேற்க உள்ளார். தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த மாணவரை பள்ளி முதல்வர் உமர் பரூக், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து மாணவர் கனிஷ்க் கூறும் போது, தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளி அறிவியல் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறேன். நாசாவில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்வது பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். நன்றாக படித்து எதிர்காலத்தில் நாசா விஞ்ஞானியாக வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றார்.

மேலும் செய்திகள்