குழந்தை கடத்தல் பீதியில் கிராம மக்களால் தாக்கப்பட்ட சென்னை கார் டிரைவர் சாவு, நினைவு திரும்பாமலேயே உயிர் பிரிந்தது

போளூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் கிராம மக்களால் தாக்கப்பட்ட சென்னை கார் டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-08-28 23:15 GMT
போளூர், 

சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் ருக்குமணியம்மாள் (வயது 65). இவரும், இவரது மருமகனும், கார் டிரைவருமான கஜேந்திரன் (35) மற்றும் உறவினர்கள் வெங்கடேசன், மோகன்குமார், சந்திரசேகர் ஆகியோர் கடந்த மே மாதம் 9-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த அத்திமூர் தம்புகொட்டான்பாறை அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு வந்தனர்.

அப்போது அவர்களை குழந்தை கடத்த வந்தவர்கள் என நினைத்து கிராம மக்கள் தாக்கினர். இதில் ருக்குமணியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 45 பேரை கைது செய்தனர்.

இதனிடையே சம்பவத்தின்போது படுகாயம் அடைந்த கார் டிரைவர் கஜேந்திரன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். 3 மாதத்திற்கும் மேலாக அவர் சுய நினைவு திரும்பாத நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கஜேந்திரன் நேற்று முன்தினம் இறந்து விட்டார். இது தொடர்பாக போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் சென்னைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அனைவரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது போளூர் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வருகின்றனர்.

ஆனால் சம்பவம் நடந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 73 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்