முடக்கி வைத்த பதிவை புதுப்பித்து வக்கீலாக பணியாற்றுவதே லட்சியம் - மாவோயிஸ்டு ஷைனா பரபரப்பு பேட்டி

குழந்தைகளை பராமரிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. முடக்கி வைத்து இருக்கும் பதிவை புதுப்பித்து மீண்டும் வக்கீலாக பணியாற்றுவதே எனது லட்சியம் என்று ஜாமீனில் விடுதலையான மாவோயிஸ்டு ஷைனா கூறினார்.

Update: 2018-08-28 23:45 GMT

கோவை,

மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த ரூபேஷ், அவருடைய மனைவி ஷைனா, அனூப், கண்ணன் மற்றும் வீரமணி ஆகிய 5 பேரை கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் வைத்து கடந்த 2015–ம் ஆண்டில் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கூட்டுச்சதி, தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பது, என்பது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் அவர்கள் மீது போலி முகவரி கொடுத்து சிம்கார்டுகள் வாங்கியது என்பது உள்பட தமிழகத்தில் 9 வழக்குகளும், கேரளாவில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியது உள்பட 7 வழக்குகள் என்று மொத்தம் 16 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்தின்மீதும் கோவை மற்றும் கேரளாவில் உள்ள கோர்ட்டுகளில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று ஷைனா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதை யடுத்து 9 வழக்குகளிலும் இருந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதுபோன்று கேரளாவில் உள்ள 7 வழக்குகளிலும் அவருக்கு கேரள கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. மேலும் அவர் தினமும் காலை 10 மணி, 10.30 மணி, மாலை 5 மணி, 5.30 மணி ஆகிய 4 நேரம் கோவை பீளமேட்டில் உள்ள கியூ பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 14–ந் தேதி கோவை மத்திய சிறையில் இருந்து ஷைனா வெளியே வந்தார். பின்னர் அவர் தினமும் காலை மற்றும் மாலையில் கியூ பிரிவு அலுவலகத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். மேலும் ரூபேஷ் கேரளாவில் உள்ள சிறையிலும், அனூப், வீரமணி, கண்ணன் ஆகியோர் கோவை மத்திய சிறையிலும் உள்ளனர்.

இந்த நிலையில் கோவை சத்தி ரோட்டில் உள்ள டெக்ஸ்டூல் பாலம் அருகே கணபதி புதூரில் தங்கி இருக்கும் ஷைனா நிருபர்களுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த 1999–ம் ஆண்டு வக்கீல் படித்த நான் 2002–ம் ஆண்டு வரை கேரள ஐகோர்ட்டில் வக்கீலாக பயிற்சி பெற்று வந்தேன். அப்போது அரசு சார்பில் நடத்தப்பட்ட தேர்வை நான் எழுதினேன். அதில் வெற்றி பெற்றதால் கோர்ட்டில் இளநிலை உதவியாளர் பணி எனக்கு கிடைத்தது. இதனால் நான் கடந்த 2002–ம் ஆண்டு முதல் 2008 வரை அந்த கோர்ட்டில் பணியாற்றினேன்.

எங்கள் மீது தமிழக போலீசார் பொய் வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். மாவோயிஸ்டு இயக்கத்தில் யார், என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் மனித உரிமை ஆர்வலர் மட்டுமே. ஆனால் என்னை மாவோயிஸ்டு இயக்க கமாண்டர் என்று கூறி வருகிறார்கள். என்னால் மூட்டு வலியால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. அதை பார்த்த போலீசார் இப்போது என்னை மாவோயிஸ்டு என்று கூறுவது இல்லை.

எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். என் மீது போடப்பட்ட பொய் வழக்கு காரணமாக நான் கடந்த 10 ஆண்டுகளாக எனது குழந்தைகளை பிரிந்து இருந்தேன். தற்போது அவர்கள் என்னுடன் இருப்பதால், அவர்களுடன் நான் அதிகளவில் நேரத்தை செலவிட முடிகிறது. இருந்தபோதிலும் எனது குழந்தைகளை அருகில் இருந்து கவனிக்காமல் போய்விட்டேனே என்ற கவலையும், வருத்தமும் எனக்குள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

தற்போது நான் ஜாமீனில் இருந்தாலும் கியூ பிரிவு போலீசார் என்னை தொடர்ந்து கண்காணித்து கொண்டேதான் இருக்கிறார்கள். எனக்கு தமிழக மற்றும் ஆந்திர போலீசாரால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் நான் சிறையில் இருந்த அனுபவங்கள் குறித்தும், எனது வாழ்க்கையில் சந்தித்த சோதனைகள் குறித்தும் புத்தகம் எழுத உள்ளேன்.

நான் வக்கீல் படித்ததும் அதை கேரள மாநிலத்தில் பதிவு செய்து உள்ளேன். தற்போது அந்த பதிவை போலீசார் முடக்கி வைத்து உள்ளனர். அந்த பதிவை மீண்டும் புதுப்பித்து வக்கீலாக பணியாற்றுவதே எனது லட்சியமாக இருக்கிறது. இதற்கு எனது மீது உள்ள அனைத்து வழக்குகளையும் சட்ட ரீதியாக போராடி வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்