வங்கியில் போலி நகையை வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி; ஒருவர் கைது

கோவை ஆவாரம்பாளையத்தில் வங்கியில் போலி நகையை வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நகை மதிப்பீட்டாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-08-28 23:00 GMT

கணபதி,

கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 60), சைக்கிள் கடை உரிமையாளர். இவர் அப்பகுதியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர் அந்த வங்கியில் 24 பவுன் நகையை ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்துக்கு அடமானம் வைத்ததாக தெரிகிறது. அந்த நகையை திருப்ப வேண்டிய காலக்கெடு முடிந்து விட்டது.

இதனைதொடர்ந்து வங்கி ஊழியர்கள் கணேசனை தொடர்பு கொண்டு உடனடியாக பணத்தை கட்டி நகையை மீட்க கூறினார்கள். உடனே அவர் அந்தப்பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் மூலம் அந்த நகையை மீட்க முடிவு செய்தார். இதற்காக அந்த நிறுவன ஊழியருடன் அவர் நேற்று மதியம் அந்த வங்கிக்கு சென்றார்.

அப்போது தனியார் நிதிநிறுவன ஊழியர் வங்கியில் பணத்தை செலுத்தியதும், கணேசன் அடமானம் வைத்த நகையை வங்கி ஊழியர்கள் அவரிடம் திரும்ப கொடுத்தனர். அப்போது அந்த ஊழியர் அந்த நகையை சரிபார்த்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஊழியர் இது குறித்து வங்கி மேலாளர் ஜெயராமிடம் புகார் செய்தார்.

பின்னர் அவரும் அந்த நகையை வாங்கி பார்த்தபோது அது போலி நகை என்பது தெரியவந்தது. இதையடுத்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் இது தொடர்பாக கணேசனிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதில் அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் கார்த்தி (34) என்பவர் உதவியுடன் போலி நகையை அடமானம் வைத்து பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அத்துடன் அவரின் பெயரில் மட்டும் அந்த வங்கியில் 14 கடன் அட்டைகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு நகையை வைத்து கடன் பெற்றவர்களில் பலர் அங்கு திரண்டனர். அவர்கள், தாங்கள் வைத்து இருக்கும் நகையை போலியாக மாற்றிவிட்டார்களா? என்பதை உடனே பார்த்து சொல்ல வேண்டும் என்று கூறியதால் வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் பார்த்து தகவல் சொல்லுவதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் ஜெயராம் கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் கணேசன் மற்றும் கார்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் கணேசன் கைது செய்யப்பட்டார். தலைமறைவான நகை மதிப்பீட்டாளர் கார்த்தியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அத்துடன் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவ குறித்து போலீசார் கூறும்போது, நகை மதிப்பீட்டாளரான கார்த்தி உதவியுடன் கணேசன் போலி நகையை வைத்து மோசடி செய்து உள்ளார். அவர் 14 கடன் அட்டைகளை வைத்து இருப்பதால், அந்த நகைகள் அனைத்தும் தங்கமா? அல்லது போலியானதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவர் பல வங்கிகளில் இதுபோன்று பல லட்சம் ரூபாய் மோசடி செய்து இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர்.

மேலும் செய்திகள்