விசாரணை நடத்தியதாக கூறி போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த பெண்

போலீசார் ஒரு தலைபட்சமாக விசாரணை நடத்தியதாக கூறி, திருவேற்காடு போலீஸ் நிலையம் முன்பு பெண் ஒருவர் தீக்குளித்தார். அவர் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.;

Update: 2018-08-28 23:15 GMT
பூந்தமல்லி,

சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே உள்ள கோலடி, செந்தமிழ் நகரை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 40). இவரது மனைவி ரேணுகா (34). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் முதியோர்களுக்கு அவர்கள் வீட்டுக்கே சென்று பணிவிடைகள் செய்து, மருந்துகள் வழங்கும் நர்சாக வேலை செய்து வந்தார்.

இவரது வீட்டின் அருகே கழிப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கழிவறைக்கு மேல் அமைக்கப்பட்ட ஓடுகள் அருகில் உள்ள அமிர்தவள்ளி என்பவர் வீட்டின் பின்பக்க கதவை திறக்க முடியாதபடி அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அமிர்தவள்ளி திருவேற்காடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து நேற்று மீண்டும் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவேற்காடு போலீசார் மீண்டும் அங்கு சென்று விசாரணை நடத்தி, இரு குடும்பத்தினரையும் போலீஸ் நிலையம் வருமாறு கூறிவிட்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை தனது கணவருடன் ரேணுகா போலீஸ் நிலையம் சென்றார். அப்போது போலீசார் ஒரு தலைபட்சமாக விசாரணை நடத்தி உள்ளனர் எனக்கூறி, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு போலீஸ் நிலைய வாசலில் இருந்து வெளியே ஓடினார்.

இதைப்பார்த்ததும் அங்கிருந்த போலீசார் தீயை அணைத்தனர். பின்னர் பலத்த தீக்காயம் அடைந்த ரேணுகாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன், பூந்தமல்லி உதவி கமி‌ஷனர் செம்பேடுபாபு ஆகியோர் திருவேற்காடு போலீஸ் நிலையம் சென்று விசாரணை நடத்தினர்.

போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும், அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்