முகநூல் மூலம் பழகி ரூ.83 ஆயிரம் பறிப்பு: ஜெராக்ஸ் கடை உரிமையாளரை ஏமாற்றிய பெண் யார்? போலீசார் விசாரணை

முகநூல் மூலம் பழகி ஜெராக்ஸ் கடை உரிமையாளரை ஏமாற்றி ரூ.83 ஆயிரம் பறித்த நாகர்கோவில் பெண் யார்? என்பது தெரியவில்லை. அந்த பெண்ணின் செல்போன் எண்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-28 22:30 GMT
நாகர்கோவில்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 45), ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரை முகநூலில் (பேஸ்புக்) தொடர்பு கொண்டு ஒரு பெண் நன்றாக பழகி வந்தார். அப்போது அந்த பெண் நாகர்கோவிலில் வசிப்பதாகவும், கணவர் வெளிநாட்டில் இருப்பதால் தனியாக வசிக்கிறேன் என்றும் தனசேகரனிடம் கூறியுள்ளார்.

சம்பவத்தன்று அந்த பெண்ணை பார்ப்பதற்காக தனசேகரன் நாகர்கோவில் வந்தார். அப்போது தன்னால் வர முடியவில்லை என்றும், தன்னுடைய தம்பியை அனுப்பி வைப்பதாகவும், அவருடன் வீட்டுக்கு வரும்படியும் தனசேகரனிடம் அந்த பெண் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் வாலிபர் ஒருவர் தனசேகரனை சந்தித்தார்.

தனது முகநூல் தோழியை பார்க்கும் ஆசையில், வந்த வாலிபரிடம் தனசேகரன் எதுவும் விசாரிக்கவில்லை. வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சிறிது தூரத்தில் மறைவான இடத்துக்கு தனசேகரனை அந்த வாலிபர் அழைத்துச் சென்றார்.

அங்கு வைத்து அவரை மிரட்டி ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை அந்த வாலிபர் பறித்தார். ஏ.டி.எம். கார்டு ரகசிய எண்ணை கேட்டு வங்கி கணக்கில் இருந்து ரூ.83 ஆயிரத்து 500-ஐ எடுத்தார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் பற்றி வடசேரி போலீஸ் நிலையத்தில் தனசேகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

தனசேகரனிடம் முகநூல் மூலம் பழகி ஏமாற்றியவர் உண்மையிலேயே பெண்தானா? அல்லது ஏ.டி.எம்.கார்டு மற்றும் செல்போனை பறித்துச் சென்ற வாலிபர்தான் போலி கணக்கு மூலம் தனசேகரனை ஏமாற்றினாரா? என்பது மர்மமாக உள்ளது.

எனவே இதை கண்டுபிடிப்பதற்காக தனசேகரனிடம் முகநூலில் பேசிய பெண்ணின் செல்போன் எண்களை போலீசார் கைப்பற்றினர். அந்த வகையில் 2 எண்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அந்த எண்களுக்குரிய சிம்கார்டு எந்த நிறுவனத்தை சேர்ந்தது? அந்த சிம்கார்டுகள் எங்கு வாங்கப்பட்டன? என்றெல்லாம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கடைசியாக அந்த பெண் பேசிய செல்போன் சிக்னல் காட்டிய பகுதி எது? என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள். இதன்மூலம் அந்த பெண்ணை கண்டுபிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்