மணல் கடத்தலை தடுக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர் மணல் கடத்தலை தடுக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

Update: 2018-08-28 22:45 GMT
திருவள்ளூர்,

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.யுவராஜ் தலைமையில் செயலாளர் காதர்மைதீன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் திருமலை வெங்கடேஷ், பூந்தமல்லி தலைவர் பாண்டியன் என திரளான மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் கூறியதாவது:– திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் குவாரிகள் எதுவும் இயங்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தில்தான் அதிக அளவில் மணல் கடத்தல் நடைபெறுகிறது.

இந்த முறைகேட்டினை தடுக்கும் பொருட்டு கடந்த 2 ஆண்டுகளாக தாம்பூலத்துடன் நூதன முறையில் மனு வழங்கியும், மேளதாளம் முழங்க கும்ப மரியாதையுடன் மணல் கடத்தல் குறித்து விரிவான முறையில் மனு அளித்தும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கண்காணிப்பு கேமராவை பொருத்தி ஆய்வு செய்து மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். லாரி உரிமையாளர் மற்றும் டிரைவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும். ஆளில்லா விமானம் மூலம் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை முற்றிலுமாக தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்