இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து நடந்தது

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து கும்பகோணம், ஒரத்தநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-08-28 22:45 GMT
கும்பகோணம்,

கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததை கண்டித்தும், தூர்வாரும் பணிக்கு ஒதுக்கிய நிதியில் மோசடி செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கும்ப கோணத்தில் உள்ள காவிரி வடிநில உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் கும்பகோணம் நகர செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட செயலாளர் பாரதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் குருசாமி, கும்பகோணம் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதேபோல ஒரத்தநாடு பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் சீனி.முருகையன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம், விவசாய சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவோணம் அருகே ஊரணிபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் முத்து.உத்திராபதி, ஒன்றிய செயலாளர் ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்