செல்போன் ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்: கிராம மக்கள் போராட்டம்

ஆரம்ப சுகதார நிலையத்தில் திடீரன மின்தடை ஏற்பட்டதால் செல்போன் ‘டார்ச் லைட்’ வெளிச்சம் மூலம் பெண்ணுக்கு டாக்டர் ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார். இதையறிந்த கிராம மக்கள் சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதியில்லாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-08-28 23:00 GMT
அரசூர்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பாவந்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் பாவந்தூர் மற்றும் சுற்றியுள்ள 15 கிராமங்களை சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதுபோல் பிரசவத்திற்காகவும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வருவது இல்லை. அதுபோல் கூடுதல் படுக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் மருத்துவர் பணியில் இல்லாமல் செவிலியர்கள் மட்டும் பணியில் இருந்து வருகின்றனர். இதனால் இரவில் அவசர தேவைக்காக இங்கு வர பொதுமக்கள் தயங்குகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை பிரசவத்திற்காக பாவந்தூரை சேர்ந்த சுரேஷ் மனைவி சுகந்தி (வயது 23) என்பவர் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நள்ளிரவில் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் இருளில் மூழ்கியது.

இதற்கிடையே சுகந்திக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்த சுகந்திக்கு அங்கு பணியில் இருந்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் பிரசவம் பார்க்க தொடங்கினர். இருள் சூழ்ந்து இருந்ததால், வேறு வழியின்றி ‘ செல்போன் ‘டார்ச்லைட்’ மற்றும் பேட்டரி கட்டையினால் ஆன ‘டார்ச்லைட்’ ஆகியவற்றின் வெளிச்சத்தின் மூலம் பிரசவம் பார்த்தனர்.

இதில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் சுகந்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்சாரம் துண்டிப்பின் காரணமாக, டாக்டர்கள் துரிதமாக செயல்பட்டதால், குழந்தையும், தாயும் நலமுடன் இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் செல்போன் ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தின் மூலம் பிரசவம் பார்த்து இருப்பது அவர்களது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெனரேட்டர் இருந்தும், அது பழுது காரணமாக இயங்காத நிலையில் இருக்கிறது. இதை சரியாக பராமரித்து வந்து இருந்தால், இதுபோன்ற நிலை ஏற்பட்டு இருக்காது.

இந்த சூழ்நிலையில் பாவந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து நேற்று காலை சுகந்தியின் உறவினர்கள் மற்றும் பாவந்தூர் கிராம மக்கள் திடீரென ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன்பேரில் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்