திருக்கனூர் அருகே சாராய ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கனூர் அருகே தனியார் சாராய ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2018-08-28 22:45 GMT

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே லிங்காரெட்டிப்பாளையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் சாராய ஆலை இயங்கி வந்தது. அப்போது அப்பகுதி மக்கள் சாராய ஆலை இயங்க எதிர்ப்பு தெரிவித்ததால் அப்போது ஆலை மூடப்பட்டது. இதற்கிடையே மூடப்பட்ட சாராய ஆலையை மீண்டும் இயக்க தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த லிங்காரெட்டிப்பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் சாராய ஆலையை மீண்டும் இயக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சாராய ஆலை இயங்க அனுமதி அளித்தால் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் கிராம மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

சாராய ஆலையை மீண்டும் இயக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே கிராம மக்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி லிங்காரெட்டிப்பாளையம், சந்தை புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி மற்றும் தமிழக பகுதிகளான நாராயணபுரம், ஒட்டை உள்பட 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்றுக்காலை சாராய ஆலை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அங்குள்ள பெட்ரோல் பங்க்கை அடைந்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.அருள்முருகன், புதுவை விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் சுத்துக்கேணி பாஸ்கர், வக்கீல் செந்தில்குமார், காட்டேரிக்குப்பம் பகுதி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் குமார், சாராய ஆலை எதிர்ப்புகுழு பூங்காவனம், ஊமத்துரை மற்றும் விவசாயிகள், கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்