கர்நாடக கூட்டணி அரசில் காங்கிரஸ் மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றம்?

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

Update: 2018-08-28 21:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

கூட்டணி ஆட்சி கவிழும்

இந்த நிலையில் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறி இருக்கிறார். இது கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. இந்த கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் என்று பா.ஜனதா கூறி வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் தலைமையில் வருகிற 1-ந் தேதி மற்றும் 2-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இதில் தலைவர்களிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பது, மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது, வாரிய தலைவர்களை நியமனம் செய்வது, மூத்த மந்திரிகளின் இலாகாக்களை மாற்றுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலாகாக்கள் மாற்றம்

மந்திரிசபையில் காங்கிரசுக்கு இன்னும் 6 இடங்கள் உள்ளன. இதற்கு எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. முன்னாள் மந்திரிகள் எச்.கே.பட்டீல், எம்.பி.பட்டீல், ராமலிங்கரெட்டி ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மூத்த மந்திரிகள் பரமேஸ்வர், கே.ஜே.ஜார்ஜ், ஆர்.வி.தேஷ்பாண்டே ஆகியோரின் இலாகாக்களை மாற்றுவது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருகிறது.

அதன்படி துணை முதல்-மந்திரி பரமேஸ்வரிடம் உள்ள பெங்களூரு நகர வளர்ச்சித்துறை கே.ஜே.ஜார்ஜுக்கும், ஆர்.வி.தேஷ்பாண்டே வசம் உள்ள வருவாய்த்துறை பரமேஸ்வருக்கு வழங்கவும், ஆர்.வி.தேஷ்பாண்டேவுக்கு தொழில்துறையும் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமலிங்கரெட்டிக்கு மந்திரி பதவி வழங்கி போலீஸ் இலாகாவை ஒதுக்குவது குறித்தும் ஆலோசனைகள் நடந்து வருகிறது.

இதுபற்றி துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எந்த ஆபத்தும்

இல்லை

“கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்த அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை. எங்கள் கட்சியின் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் வருகிற 1-ந் தேதி மற்றும் 2-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நிர்வாகிகள் கூட்டத்தை பெங்களூருவில் நடத்துகிறார். இதில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து விவாதிக்கப்படும்.

3 மாதங்கள், 6 மாதங்களுக்கு ஒரு முறை மந்திரிகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று மேலிட தலைவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதன்படி மந்திரிகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் பணி ரகசியமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் கேட்கும்போது அறிக்கையை வழங்குவேன்.

கூட்டணி ஒருங்கிணைப்பு குழு

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் சனாதனா அமைப்புக்கு தொடர்பு இருப்பது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை. ஒருவேளை இந்த தகவல் நிரூபிக்கப்பட்டால் அந்த அமைப்புக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்துவது குறித்து சித்தராமையா முடிவு செய்வார்.”

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

மேலும் செய்திகள்