மாநில அரசின் ரூ.5 லட்சம் நிவாரண தொகைக்கு ஆசைப்பட்டு மகன் மாயமானதாக நாடகமாடிய தம்பதி கைது
குடகில், மாநில அரசின் ரூ.5 லட்சம் நிவாரண தொகைக்கு ஆசைப்பட்டு மகன் மாயமானதாக நாடகமாடிய தம்பதி கைது செய்யப்பட்டனர்.
குடகு,
குடகில், மாநில அரசின் ரூ.5 லட்சம் நிவாரண தொகைக்கு ஆசைப்பட்டு மகன் மாயமானதாக நாடகமாடிய தம்பதி கைது செய்யப்பட்டனர்.
வரலாறு காணாத சேதம்
குடகு மாவட்டத்தில் மழை வெள்ளம், நிலச்சரிவால் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 17-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குடகு மாவட்டத்தில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகைக்கான காசோலையும் வழங்கப்பட்டு வருகிறது.
தம்பதியிடம் விசாரணை
இந்த நிலையில், முக்கொட்லுவை சேர்ந்த சோமசேகர்-சுமா தம்பதியினர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தங்களது 7 வயது மகன் ககன் கணபதியை காணவில்லை என்றும், அவன் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் மடிகேரி போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார், அவர்கள் கூறியபடி முக்கொட்லு பகுதியில் தீவிரமாக தேடினார்கள். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. அவனுடைய உடலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மடிகேரி போலீசார், அவர்கள் 2 பேரையும் முக்கொட்லு பகுதிக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், 2 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.
கைது
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளதால், அந்த நிவாரண தொகைக்கு ஆசைப்பட்டு, மகன் மாயமானதாகவும், அவன் நிலச்சரிவில் சிக்கி இறந்திருக்கலாம் என்றும் அவர்கள் நூதன முறையில் நாடகமாடி ரூ.5 லட்சம் நிவாரண தொகையை பெற முயன்றதும் தெரியவந்தது. அவர் களுக்கு குழந்தைகளே இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மடிகேரி போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.