தூர்வாரும் பணிக்காக செலவழித்த தொகை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

தூர்வாரும் பணிக்காக செலவழித்த தொகை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2018-08-28 23:00 GMT
திருவாரூர்,

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சொந்த முயற்சியால், உழைப்பால் தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவம் கிடைப்பதற்காகவும், இந்த சமுதாயத்தின் மேன்மைக்காகவும் பணியாற்றியதை போல ஸ்டாலினும் இந்த சமுதாயத்தின் மேன்மைக்கு பாடுபட வேண்டும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் நல்ல முறையில் பெய்து மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. நாள்தோறும் சுமார் 3 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விட்ட போதிலும் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை.

அங்குள்ள நீர் நிலைகளிலும் தண்ணீர் நிரப்பப்படவில்லை. குடிமராமத்து பணி, தூர்வாரும் பணியில் ஊழல் நடைபெற்றதன் காரணமாக கடைமடை பகுதிகளை தண்ணீர் சென்றடையவில்லை. இதனால் கடைமடை பகுதி பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.

மணல் கொள்ளை காரணமாக முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மூலமாக கோடை காலத்தில் செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகள் முறையாக செய்யப்படவில்லை. மணல் கொள்ளையையும் தடுக்கவில்லை.

எனவே இதுவரை பாசன மேம்பாட்டுக்காகவும், குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிக்காகவும் செலவழித்த தொகை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகள் மட்டுமின்றி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உள்ள 18 தொகுதிகளுக்கும் தேர்தல் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தமிழக மக்கள் விரும்பும் வகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது கூட்டணி வியூகத்தை வகுக்கும். மத்திய அரசு காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக மாற்றும் செயலில் ஈடுபட்டு வருகிறது. அதன் காரணமாகவே காவிரி விவகாரத்தில் அவர்கள் நல்ல அணுகு முறையை மேற்கொள்ளவில்லை. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை நிறைவேற்றவும் உறுதியாக உள்ளனர்.

நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். மத்திய அரசின் சதி திட்டங்களான மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு துணை போகக்கூடாது.

ஆறு, வாய்க்கால்களை தூர்வாராமலும், கடைமடைக்கு தண்ணீர் செல்லாமலும் இருக்கிற நிலையை பார்க்கும்போது மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு துணை போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அதனை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்