ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் பொதுமக்கள், அரசு நடவடிக்கை எடுக்குமா?
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.புதூர் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் டி.புதூர் கிராமம் அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கும் இந்த கிராமத்திற்கு வைகை ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இந்த கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்கதொட்டி கட்டப்பட்டது.
ஆனால் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து வரும் தண்ணீர் பல மாதங்களாக இந்த கிராமத்தில் சரிவர வினியோகம் செய்யப்பட வில்லை. அப்படியே வந்தாலும் குழாயில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே வருவதாகவும், இதனால் தண்ணீருக்காக குழாயடியில் பலமணிநேரம் காலிக்குடங்களுடன் காத்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் தவிக்கும் நிலை உள்ளது.
எனவே அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக பக்கத்து கிராமங்களுக்கும், விவசாயத் தோட்டங்களுக்கும் அலைகின்றனர். கிராம மக்கள் மொத்தமாக பணம் கொடுத்து டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பிடித்து வரும் அவல நிலையும் உள்ளது. கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்பட்டு உள்ளது. டி.புதூர் கிராமத்திற்கு போதிய குடிநீர் வசதி மற்றும் அரசு பஸ் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை மனுகொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடிநீர் வசதி மற்றும் அரசு பஸ்வசதி செய்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.