வருசநாடு கூட்டுறவு சங்க தேர்தல் 2–வது முறையாக ஒத்திவைப்பு: அதிகாரிகள் காரை அ.தி.மு.க.வினர் முற்றுகை
வருசநாடு கூட்டுறவு சங்க தேர்தல் 2–வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதிகாரிகள் வந்த காரை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
கடமலைக்குண்டு,
கடமலை–மயிலை ஒன்றியம் வருசநாடு கூட்டுறவு சங்கத்தில் வருகிற 1–ந்தேதி இயக்குனர்களுக்கான தேர்தல் நடைபெற இருந்த நிலையில் நேற்று முன்தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் ஒட்டப்பட்டது. நேற்று வேட்பாளர்கள் வாபஸ் பெற இறுதி நாள் என்பதால் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு தேர்தல் அதிகாரிகள் வந்தனர்.
அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் வேட்புமனு பரிசீலனையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி தேர்தல் அதிகாரிகள் வந்த காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த வருசநாடு போலீசார் தேர்தல் அதிகாரிகளை காருடன் பாதுகாப்பாக வருசநாடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அதன்பின்னர் போலீசார் அ.தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் முறைகேடுகள் அதிக அளவில் நடைபெற்றுள்ளதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதற்கிடையே அ.ம.மு.க.வினர் வருசநாடு போலீஸ் நிலையத்திற்கு சென்று தேர்தலை ரத்து செய்யாமல் ஏற்கனவே அறிவித்தபடி 1–ந்தேதி தேர்தல் நடைபெற வேண்டும் என தெரிவித்தனர். மேலும் அதிகாரிகள் காரை முற்றுகையிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதனால் வருசநாடு கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்டிப்பட்டியில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அதன்பின்னர் போலீஸ் நிலையத்தில் ஆண்டிப்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கணபதி தேர்தல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் தேர்தலை ஒத்தி வைக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின்னர் போலீசார் பாதுகாப்புடன் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.ம.மு.க.வினரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். மேலும் தேர்தல் அதிகாரி ஆசிர்வாதம் அளித்த புகாரின் அடிப்படையில் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக கூறி வருசநாடு கிராமத்தை சேர்ந்த லட்சுமணன்(வயது 38), திருமுருகன்(35), முத்துராஜ்(35), மலைச்சாமி(40) ஆகிய 4 பேர் மீது வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வருசநாடு கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2.5.2018 அன்று அ.தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரியிடம் இருந்து இறுதி வேட்பாளர் பட்டியலை கிழித்து வீசியதால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது 2–வது முறையாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.