காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டம்

மார்த்தாண்டம் அருகே தற்கொலை செய்த இளம்பெண்ணின் உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2018-08-28 23:00 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் நாகம்பாறைவிளையை சேர்ந்தவர் விபின்(வயது 33). இவருடைய மனைவி அனிதா(26). இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன்–மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அனிதா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடலை மார்த்தாண்டம் போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அனிதாவின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரி வளாகத்தில் கூடியிருந்தனர்.

அவர்கள் விபினின் பெயரில் உள்ள சொத்தை குழந்தையின் பெயரில் எழுதி வைத்தால்தான் உடலை பெற்றுக்கொள்வோம் என கூறினர். அதற்கு விபினும் அவரது உறவினர்களும் முதலில் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து உடலை பெற்றுக்கொண்டு, சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சென்ற பின்பு உறவினர்கள் இடையே மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. உடனே, சொத்தை குழந்தையின் பெயரில் எழுதி வைக்கும் வரை உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விபின் மற்றும் அவரது உறவினர்கள் வெட்டுமணியில் உள்ள சார் பதிவாளர் அலுவலத்துக்கு சென்று, சொத்தை குழந்தையின் பெயரில் எழுதி வைத்தனர். அதன்பின்பு அனிதாவின் உடல் அடக்கம் செய்யும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்