கனித்தமிழுக்கு மேன்மை சேர்த்த கால்டுவெல்!

அன்னைத் தமிழின் குருதியிற் பிறந்தவையே கன்னட மொழியும், சுந்தரத்தெலுங்கும் அழகிய மலையாளமும், அருமைத்துளுவும் என்று வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண பெருநூலைப் படைத்தவரே ராபர்ட் கால்டுவெல்.

Update: 2018-08-28 11:03 GMT
அயர்லாந்து நாட்டின் கிளாடி எனும் ஆற்றங்கரையில் அமைந்த சிற்றூரில் 1814-ல் பிறந்தவர். ஸ்காட்லாந்து சென்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். லண்டனில் உள்ள கிறிஸ்தவ சமயத்தொண்டர் சங்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற அவர் அங்கிருந்து தென் இந்தியாவுக்கு கப்பலில் பயணம் மேற்கொண்டு நான்கு மாதங்களில் சென்னை துறைமுகம் வந்தடைந்தார். சென்னையில் இருந்து நெல்லைக்கு 400 மைல் தூரம் நடந்தே சென்று தமிழின் இயல்புகளையும், பண்பாட்டையும் முழுவதும் அறிய ஆவல் கொண்டார். பாளையங்கோட்டை வழியாக இடையன் குடியை அடைந்தார்.அங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக சமயத்தொண்டும், மொழித்தொண்டும் திறம்பட ஆற்றினார்.கல்விச்சாலைகள் நிறுவி கற்றோர் தொகையை அதிகப்படுத்தினார்.

கிறித்தவரும் இந்து மதமும், தாமரைத் தடாகம் ஞான நீராட்டு நற் கருணை மாலை உள்ளிட்ட பல நூல்களை எழுதினார். ஆனால் கால்டுவெல் தன் வாழ்நாளையெல்லாம் செலவிட்டு மிகுந்த ஆர்வத்தோடும் எழுச்சியோடும் தீட்டிய ஒப்பரிய நெடுநூல்தான் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ ஆகும். இந்நூலின் முன்னுரையே 153 பக்கங்களைக் கொண்ட அற்புத ஆய்வுரை கொண்டதாகும். நூலின் மற்ற 640 பக்கங்களில் மொழி ஒலி, வேர்ச்சொல், பெயர்க்காரணம், இடம் பெயர், வினைச் சொல், சொல்லியல் ஒருமைப்பாடு எனும் பெருங்கூறுகளுடன் நம் செம்மார்ந்த தமிழ்மொழியின் மிகப் பெரும் கீர்த்தியையும் நேர்த்தியையும் அற்புதமாக விளக்குகிறார். அதை முழுவதும் ஆய்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் கால்டுவெல்லை வியந்து போற்றி ‘நல்லறிஞர்’ பட்டம் அளித்து மகிழ்ந்தன.

‘இந்திய நாட்டில் வழங்கும் மொழிகள் அனைத்தும் ஆரிய இன மொழிகளே! என்று தவறான திக்கில் நடைபோட்ட ஐரோப்பிய மொழி நூலறிஞர்களின் கருத்துக்களை ஆதாரங்களுடன் மறுத்து, பல்வேறு கண்டுபிடிப்புகளால் திராவிட இன மொழிகளின் மாப்பெருமையை நிலைநாட்டி பெருநூல் வடித்தவர்தான் கால்டுவெல். திராவிட இன மேற்கோளின் இன ஒற்றுமையை இவரைப் போல் ஆய்ந்து மாபெரும் இலக்கண நூல் தீட்டியவர் வேறு எவரும் இல்லை. தமிழுலகம் காலமெல்லாம் இவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.

‘அரிசி’ ‘கட்டுரம்’, ‘தோகை’ போன்ற நம் தாய்த் தமிழ்ச் சொற்களே கோளம் முழுதும் உள்ள மொழிகளுக்குக் கடனாகத் தமிழால் தரப்பட்டவை.

1856-ம் ஆண்டிலேயே அச்சேறிய கால்டு வெல் தீட்டிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ தான் உலக மொழிக் குடும்பங்களில் உயர் தனிச் செம்மொழியாக நம் செந்தமிழ் எப்படித் தனிப்பெரும் ஆற்றலுடன் கம்பீரமாகத் திகழ்கிறது என்பதை முதன்முதலில் நிறுவியது.

தமிழில்தான் ‘உயர்திணை’ என்றும் ‘அஃறிணை’ என்றும் பகுத்தறிவுக்கு ஏற்ப பாகுபாடு உள்ளதென்பதை அழுத்தமுடன் கூறியவர் கால்டுவெல் . உலகில் வேறு எந்த மொழியிலும் இந்த நுட்ப இலக்கணப் பாகுபாடு இல்லை என்றும் கூறியவர் அவரே.

நம் தமிழ் மீது தீராக் காதல் கொண்ட கால்டுவெல், தம் இல்லற வாழ்வையும் தமிழர் பாணியில் அமைத்துக் கொண்டார். அப்பொழுது நாகர்கோவிலில் லண்டன் மிஷன் சங்கத்தில் தொண்டாற்றிய சார்லஸ் மார்ட்டின் மகள் எலிசாவைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்தே நெல்லைச் சீமையில் கல்விப் பணிகளை மேற்கொண்டனர். இவர்கள் மகன் ஆடிஸ்டன் ஆஸ்திரேலியா சென்று மருத்துவப் பணியாற்றித் தொண்டு செய்தார்.

மொழிகளின் மேல் மாறாப் பற்று கொண்ட செம்மல் கால்டுவெல் பதினெட்டு மொழிகளில் புலமை பெற்றவர் ஆவார். நம் தமிழ்மறை திருக்குறளையும், சீவக சிந்தாமணியும், இலக்கண நூல்களை மிகுந்த ஈடுபாட்டுடன் ஆய்ந்தார்.

கிரேக்கம் போன்ற நாடுகளுக்கு தமிழகம் வெறும் அகிலையும், துகிலையும் மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை. எழிலார்ந்த தமிழ்ச் சொற்களையும் ஏற்றுமதி செய்தது என்பதை ஆணித் தரமாக எடுத்துக் கூறியவர் கால்டுவெல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் கொற்கைத் துறைமுகத்திலும், தொண்டித் துறைமுகத்திலும் எருமைக் கூட்டங்களைப் போல் கிரேக்க ரோமானியக் கப்பல்கள் வந்து காத்துக் கிடந்த காட்சிகளைப் பெருமிதத்துடன் அகழ்ந்தாய்ந்து வியந்து கூறியவர் இவரே. இப்போதைய ‘தூத்துக்குடி’யின் உண்மையப் பெயர் ‘தூற்றுக்குடியே. ஓர் ஊற்று வற்றிப் போனால், உடனே அதைத் தூர்த்து புதிய ஊற்றை வெட்டிக் கொள்ளும் பேருழைப்பு மண்டியோர் நிறைந்த நகரமே ‘தூத்துக்குடி’ ஆனது என்பார் கால்டுவெல்.

அவர் ஓரிருமுறை தாயகம் சென்று வந்தாலும், தம் வாழ்நாளில் மிகுதியாக 53 ஆண்டுகள் நம் தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து, ஊர் ஊராகச் சுழன்று வந்து ஒவ்வோர் இடத்தையும் ஆராய்ந்து பல புதிய கண்டுபிடிப்புகளைக் கூறி தமிழகத்தின் மேன்மையை உலகின் விழிகளுக்கு உணர்த்தினார்.நம் தாய்த்தமிழைக் கடவுள் கற்பித்த மொழி என்றும், வடமொழிக் கால்வழி மொழி என்றும் வெகு சிலர் தவறாகச் சொன்னபோது, அது பன்னெடுங்காலம் முன்பிருந்து புழங்கிய செவ்வியல் மொழி என்றும், தனித்தியங்கும் ஆற்றல் வாய்ந்த செம்மொழி என்றும் தெள்ளத் தெளிவாக ஆய்ந்து கூறியவரே நம் கால்டுவெல்.அறிஞர் அண்ணா கால்டுவெல் சிறப்பைத் தமிழர்கள் மறவா வண்ணம் சென்னைக் கடற்கரையில் அவருக்கு அழகிய சிலையை நிறுவினார்.தமிழ் மண்ணையே தாயகம் ஆக்கிக் கொண்ட செம்மல் கால்டுவெல் தம் இறுதி நாள்களில் கொடைக்கானலில் சிறுகுடில் அமைத்துக் கொண்டு தன் மகனுடன் வாழ்ந்தார்.

மொழிப் பணியாலும் சமுதாயப் பணியாலும், சமயப் பணியாலும், புகழ் மகுடம் பெற்ற கால்டுவெல் 1891-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்28-ந் தேதி கொடைக்கானலில் மரணம் அடைந்தார். அவர் பல்லாண்டு பணிபுரிந்த இடையன்குடிக்கே அவர் உடல் கொண்டு வரப் பெற்று அதன் ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேன்மை மிகுந்த அம்மாமனிதரின் மாட்சிக்கு என்றென்றும் சாட்சியாக விளங்குவது ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணப்’ பணியே. அயர்லாந்தில் பிறந்து தன் உயர்வான மொழித் தொண்டால் நம் விழியெல்லாம் நிறைந்திருக்கும் அப்பெருமகனின் புகழ் என்றென்றும் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும். இது திண்ணம்.இன்று(ஆகஸ்டு28-ந்தேதி) கால்டுவெல் நினைவுநாள்.

- கவிவேந்தர் கா.வேழவேந்தன், (முன்னாள் அமைச்சர்)

மேலும் செய்திகள்