நேர்காணலில் இடம் பெறும் தன் மதிப்பீட்டு வினாக்கள்...

நேர்காணல் சவால் நிறைந்தது. அதில் தவறாமல் இடம் பெறும் கேள்விகளில் தன்மதிப்பீட்டு வினாக்களுக்கு முக்கிய இடம் உண்டு.

Update: 2018-08-28 10:20 GMT
இதில் நம்மைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு நமது குணநலன்கள், மேலாண்மை பண்புகளை மதிப்பிடுவார்கள். இதற்கு ‘செல்ப் அப்ரைசல் டெஸ்ட்’ என்று பெயர். சுய விளக்கத் தேர்வு என்றும் இதை அழைப்பதுண்டு. ஒரு போட்டியாளர் தன்னைப் பற்றி விரிவாக விளக்கமாக எழுதுவதற்கு அல்லது சொல்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இந்தத் தேர்வின்போது நமது குணங்கள், சிறப்புகள், குறைபாடுகள் ஆகியவற்றை பற்றி சுய விளக்கம் தரலாம். பல நேரங்களில் குறைபாடுகளை சோதித்து அறியும் வகையில் எதிர்மறையான கிடுக்கிப்பிடியான கேள்விகள் கேட்கப்படும். இது போட்டியாளரின் மனநிலையையும், அவரது குறை நிறைகளையும் எளிதில் அறிந்து கொள்ள உதவுகிறது.

உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்கள் ஆசிரியர் உங்களைப் பற்றி என்ன நினைப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள், நீங்கள் என்னென்ன பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?, மோசமான சில சூழல்களைக் கூறி அதிலிருந்து விடுபட என்ன செய்வீர்கள்? என்பது போன்ற கேள்விகள் இதில் இடம் பெறலாம்.

இத்தகைய கேள்விகளுக்கு குறித்த நேரத்தில், குறிப்பிட்ட அளவுக்கு மிகாமல் பதில் அளிக்க வேண்டும். யூ.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. தேர்வுகளில் இது போன்ற தேர்வுக்கு எழுத்து மூலம் விடையளிக்க வேண்டியிருக்கும். பல்வேறு நிறுவனங்களிலும இந்த கேள்விகள் வாய்மொழித் தேர்வாக கேட்கப்படுவது உண்டு். குழு விவாத தேர்விலும்கூட மேலாண்மைப் பண்பை வெளிக் கொண்டு வரும் விதமாக பொதுவான சூழல் விளக்க கேள்விகளில் உங்களை ஈடுபடுத்திக் கேட்பார்கள்.

தன்விளக்க கேள்விகளுக்குப் பதிலளிக்க அதிகம் பயிற்சி தேவையில்லை என்றாலும், பதற்றமின்றி தன்னைப் பற்றி வெளிப்படுத்த தெளிவான மனநிலையும், சாதுர்யமாக பதிலளிக்கும் திறனும் அவசியமாகும். முந்தைய தேர்வு வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுவதைவிட வழக்கமான தகவல் தொடர்புத் திறனை வளர்த்துக் கொண்டவர்களால் இத்தகைய கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளிக்க முடியும். தன்னம்பிக்கையும், தகவல் தொடர்புத்திறனையும் வளர்த்துக் கொண்டால் தன் மதிப்பீட்டுத் தேர்வில் நீங்கள் எளிதாக ஜெயிக்கலாம்! 

மேலும் செய்திகள்