கலெக்டர் அலுவலகத்துக்கு விநாயகர் சிலைகளுடன் வந்த இந்து முன்னணியினர், சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்த கலெக்டரிடம் மனு

அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் குறைதீர்வு நாள் கூட்டத்தின்போது சிலைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2018-08-28 00:30 GMT
வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் அட்டை. கடனுதவி, பொதுநல மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு வகை பிரச்சினைகள் குறித்து 460 மனுக்கள் பெறப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி நேற்று ஊர்வலமாக வந்து கலெக்டரிடம் மனு கொடுக்கப் போவதாக இந்து முன்னணியினர் அறிவித்திருந்தனர். அதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பாக காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்ஸ் மேற்பார்வையில் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு இரும்பு கம்பிகளால் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் இந்து முன்னணியினர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே திரண்டனர். அவர்கள் அங்கிருந்து விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்து முன்னணியினர் சிலர் தடுப்புகளை மீறி கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, முதற்கட்டமாக 10 பேர் மட்டும் கலெக்டரிடம் மனு அளிக்க அனுமதித்தனர்.

இந்து முன்னணியினர் கலெக்டரிடம் அளித்த மனுவில், “தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பல ஆண்டுகளாக அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்தாண்டு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட 24 கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் சிலை வைக்க அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகளால் சாதாரண மக்கள் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முடியாத நிலை காணப்படுகிறது.

இது மத வழிபாட்டு உரிமையை மறுப்பது போன்று உள்ளது. விநாயகர் சிலையை வைக்க மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியரிடம் தான் அனுமதி பெறவேண்டும் என்று போலீசார் கூறி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி, விழாவை சாமானிய மக்களும் கொண்டாட வழிவகை செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

தொடர்ந்து இந்து முன்னணியினர் தமிழக முதல்- அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு தபால் மூலம் மனு அனுப்பினர்.

மேலும் செய்திகள்