திருப்பத்தூர் அருகே கி.பி.12-ம் நூற்றாண்டின் “நவகண்ட சிற்பங்கள்” கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே கி.பி.12-ம் நூற்றாண்டை சேர்ந்த “நவகண்ட சிற்பங்கள்” கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்கள் பிரபு, சிவசந்திரகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் ராதாகிருஷ்ணன், முத்தமிழ் ஆகியோர் திருப்பத்தூரை அடுத்த மடவாளம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு கி.பி.12-ம் நூற்றாண்டை சேர்ந்த “நவகண்ட சிற்பங்களை” கண்டறிந்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் பிரபு கூறியதாவது:-
திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள தொன்மையான ஊர்களில் மடவாளமும் ஒன்று. மடவாளம் என்றால் திருக்கோவிலை சுற்றியுள்ள ஊர் என பொருள்படும். இவ்வூரில் வரலாற்று சிறப்புமிக்க அங்கநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
இக்கோவிலுக்கு கிழக்கே உட்கலநாகப்பன் என்ற பெயரில் சிறிய கோவில் உள்ளது. இங்கு 3 சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 ஆண் உருவங்களும், ஒன்று பெண் உருவமுமாகும்.
ஆண்கள் இருவரின் வலது கைகளில் நீண்ட வாள்கள் உள்ளன. இடது கைகளில் உள்ள வாளினால் தமது கழுத்தினை அறுத்தவண்ணம் உள்ளனர். இடையில் சிறிய கத்தியினை இருவரும் வைத்துள்ளனர். கழுத்தில் 3 ஆபரணங்களை இருவரும் அணிந்துள்ளனர். மேல் நோக்கிய சீரான கொண்டையினை முடிந்துள்ளனர். நீண்ட காதுகள் காணப்படுகின்றன.
முதலாவது சிற்பம் உயரமாகவும், அதனை அடுத்துள்ள சிற்பம் சற்று உயரம் குறைவாகவும் காணப்படுகின்றன. இருப்பினும் இரு உருவங்களுக்கும் ஒருவித ஒருமைப்பாடு இருப்பது தெரிகிறது. இவ்விருவரும் சகோதரர்களாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. தன் கழுத்தை தானே அறுத்து பலியிடும் சிற்பம் “நவகண்டம்” என அழைக்கப்படுகிறது. உயிர்பலியின் உச்சகட்ட பலியாக இதை கூறுவர். பொதுவாக நவகண்ட பலியானது, கொற்றவை என்ற தெய்வங்களுக்கு வழங்கப்படும்.
ஊரின் நலனுக்காகவோ, நாட்டு நலனுக்காகவோ தன் தலையையோ அல்லது உடல் உறுப்புகளையோ காணிக்கையாக தரும் வழக்கம் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. தம் உயிரை துச்சமென எண்ணித் தாமே பலியிட்டுக் கொள்ளும் வீரர்களுக்கு சிறப்பு செய்யும் வழக்கமே நவகண்ட சிற்பங்களாகும்.
இவ்வாறு இறந்தவர்களை தெய்வமாக வணங்கும் வழக்கம் வழக்கில் இருந்துள்ளது. உயிர்நீத்த வீரர்களின் வம்சாவழியினருக்கு மன்னர்கள் காலத்தில் நிலம் தானமாக வழங்குவார்கள். அந்த நிலங்களை உதிரப்படி என்பர். இச்சிற்பங்கள் இப்பகுதியில் தலைப்பலி கொடுத்து கொண்ட வீரர்களுக்கானவையாகும்.
அருகில் உள்ள பெண் சிற்பம் இவ்வீரர்களில் ஒருவரது மனைவியாக இருக்கலாம். வீரன் மடிந்தவுடன் அவனோடு அவளும் மடிந்திருக்கலாம். இச்சிற்பங்கள் முன்பு அங்கநாதீஸ்வரர் கோவில் முன்பு இருந்ததாகவும், காலப் போக்கில் இவ்வூர் ஏரியின் அருகில் இருந்ததாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு அதனை மீட்டு தற்போதைய இடத்தில் வைத்திருப்பதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இச்சிற்பங்கள் கி.பி.11 அல்லது 12-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். சிலையில் வேறு எந்த தகவலும் இல்லாததால், இவ்வீரர்கள் நவகண்ட பலிக்கான காரணம் ஏதும் தெரியவில்லை. இருப்பினும் இவ்வூரில் உள்ள சிவன் கோவிலுக்கும் இச்சிற்பங்களுக்கும் உள்ள தொடர்பு ஆராயப்பட வேண்டியதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.