போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.30 லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர்

போலி நகைகளை அடமானம் வைத்து, ரூ.30 லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர்-நகை மதிப்பீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் டி.ஜி.வினயிடம் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2018-08-27 21:45 GMT
திண்டுக்கல், 


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், ஒட்டன்சத்திரம் பொதுமக்கள் சார்பில் முபாரக் அலி என்பவர் கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், கடந்த ஜூன் மாதம் அடகு நகைகள் ஏலம் விடப்பட்டன. அதில், நான் பார்வையாளராக கலந்து கொண்டேன். அப்போது ஒருவர், ரூ.72 ஆயிரத்துக்கு ஒரு நகையை ஏலம் எடுத்தார். சிறிது நேரத்தில் அது கவரிங் நகை என்பது தெரியவந்தது.
உடனே, அதனை வங்கி மேலாளரிடம் கொடுத்ததால் அவருக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டது. இந்த விவரத்தை மேல் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் நகை மதிப்பீட்டாளரும், மேலாளரும் மறைத்துவிட்டனர்.

இதுதொடர்பாக நாங்கள் வங்கி பொதுமேலாளரிடம் புகார் அளித்தோம். அதன்பேரில், மற்றொரு நகை மதிப்பீட்டாளர் வரவழைக்கப்பட்டு வங்கியில் இருந்த நகைகள் சோதனை செய்யப்பட்டன. சோதனை முடிவில், மேலும் 9 நகைகள் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வங்கி மேலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் சேர்ந்து தெரிந்த நபர்கள் 10 பேர் மூலமாக போலி நகைகளை பெற்று அவர்களுக்கு அடமான கடன் கொடுத்துள்ளனர். அந்த 10 நபர்களிடமும் ஒரு குறிப்பிட்ட பணத்தை இருவரும் லஞ்சமாக வாங்கியுள்ளனர். அந்தவகையில் இருவரும் சேர்ந்து ரூ.30 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர்.

இதேபோல், போலி ஆவணங்கள் மூலம் முத்ரா திட்டத்தின் கீழ் பலருக்கு கடனும் வழங்கி உள்ளனர். ஆனால், இந்த வழக்கில் வங்கி மேலாளரை தப்பிக்கவிட்டு நகை மதிப்பீட்டாளரை மட்டும் சிக்க வைக்கும் நோக்குடன் உயர் அதிகாரிகள் செயல்படுகின்றனர். அதன்படி, வங்கி மேலாளரை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டனர். நகை மதிப்பீட்டாளரை பணிஇடைநீக்கம் செய்துள்ளனர்.
எனவே, மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வங்கியில் போலி நகைகள் உள்ளனவா? என்றும் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் வழங்கி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

தாண்டிக்குடியை சேர்ந்த கணேஷ்பாபு கொடுத்த மனுவில், குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் வேண்டி இதுவரை 175 மனுக்கள் கொடுத்துள்ளேன். ஆனால், எனது மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மனு அளித்து 30 நாட்களுக்குள் பதில் அளிக் காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

திண்டுக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக படித்து டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 46 மாணவர்களை பாராட்டி கலெக்டர் புத்தகங்களை வழங்கினார். 

மேலும் செய்திகள்