தடையை மீறி விவசாய சங்கத்தினர் சாலை மறியல்

சிதம்பரம் அருகே பாசனவாய்க்கால்களை தூர்வாராததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், போலீசார் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-27 21:30 GMT
காட்டுமன்னார்கோவில், 


காவிரி கடைமடை பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாத காரணத்தினால், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடை மடையை வந்தடையவில்லை. இதனால் காவிரி நீர், கொள்ளிடம் ஆற்றின் வழியாக சென்று கடலில் கலந்து வீணாகி வருகிறது என்று விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியன சார்பில் காவிரி நீரை முறையாக பயன்படுத்த தவறிய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர்.

அந்த வகையில், காவிரியின் கடைமடை பகுதியாக இருக்கும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த காட்டுமன்னார் கோவிலில் நேற்று காலை போராட்டம் நடை பெற்றது. இதற்கென விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் காட்டுமன்னார் கோவில் பஸ்நிலையத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஒன்று திரண்டனர். பின்னர் அங்கிருந்து தாலுகா அலுவலகம் நோக்கி அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது அவர்கள், காவிரி நீரை பாசனத்துக்கு அனுப்பாமல் கடலுக்கு அனுப்பியதை கண்டித்தும், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், குமராட்சி பகுதியில் ஏரி, குளம், பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வாராததற்கு காரணமான பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டிப்பது, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரியில் வருடந்தோறும் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், பாசன வாய்க்கால்களை தூர்வாரியதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது போன்ற கோரிக்கைளை முழக்கங்களாக எழுப்பியபடி விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.


ஊர்வலம் தாலுகா அலுவலகத்தை சென்றடைந்தவுடன், அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கச்சேரி சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் தலைமையிலான போலீசார், அவர்களிடம் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, எனவே மறியலில் ஈடுபட கூடாது, தடையை மீறினால் அனைவரையும் கைது செய்வோம் என்று போலீசார் எச்சரித்தனர்.

இதை பொருட்படுத்தாத விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இது கைகலப்பில் சென்று முடிந்தது. இதில் ஒருவரையொருவர் மாறிமாறி கைகளால் தாக்கி கொண்டனர். சுமார் 10 நிமிடம் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதையடுத்து போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை இழுத்து சென்று போலீஸ் வேனில் ஏற்றினர்.

ஒருசிலரை குண்டுகட்டாக தூக்கி சென்றதையும் பார்க்க முடிந்தது. இதையடுத்து விவசாய சங்கங்களை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்