கல்குவாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் பொதுமக்கள் மனு
சேலம் அருகே கல்குவாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா பொம்மியம்பட்டி, உம்பிளிக்கம்பட்டி, சுண்டகாப்பட்டி, காட்டுவளவு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தி வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், எங்கள் பகுதிகளில் இயங்கி வரும் கல்குவாரிகளில் வெடி வெடிக்கும் போது ஏற்படும் நில அதிர்வால் வீடுகளின் சுவர்களில் வெடிப்பு ஏற்படுகிறது. பழைய சுவர்கள் இடிந்து விழும் நிலை உள்ளது. விவசாய நிலம் மீது கற்கள் விழுவதால் கால்நடைகளை மேய்க்க அச்சமாக உள்ளது.
கல் துகள்கள் காற்றில் கலந்து மாசுபடுவதால் பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கோடைகாலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கல்குவாரிகள் மூலம் ஏரிக்கு வரும் மழைநீர் தடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் கல்குவாரிகளை இயக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.
சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த கோவிந்தன் உள்பட பலர் கலெக்டர் ரோகிணியை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில், நாங்கள் நிலம் வாங்குவதற்காக சேலத்தில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தவணை முறையில் பணம் செலுத்தினோம். பணத்தை முழுமையாக செலுத்திய பின்னர் ஒவ்வொருவருக்கும் தலா 500 சதுர அடி நிலம் தருவதாக அவர்கள் கூறினார்கள். ஆனால் இதுவரை எங்களுக்கு நிலம் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். எனவே அந்த ரியல் ரிஸ்டேட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள சாம்ராஜ் பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், ‘எங்கள் பகுதிக்கு காவிரி நீர் 15 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது எங்களுக்கு போதுமானதாக இல்லை என்பதால் அருகில் உள்ள குடிநீர் தொட்டிக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்தோம்.
இந்தநிலையில் அந்த தொட்டியில் உள்ள மின் வயர் துண்டிக்கப்பட்டது. இதனால் தற்போது குடிநீருக்காக மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே அங்கு குடிநீர் பிடிக்க மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.