மழை குறைந்தாலும் குழித்துறை ஆற்றில் தடுப்பணையை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது போக்குவரத்து பாதிப்பு

மழை குறைந்தாலும் குழித்துறை ஆற்றில் தடுப்பணையை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இதனால் 14-வது நாளாக அந்த வழியாக இருசக்கர வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-08-27 22:45 GMT
குழித்துறை,

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் கடந்த 14-ந் தேதி முதல் ஆறுகள், கால்வாய்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிலும் குழித்துறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கிராம மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானார் கள்.வெள்ளப்பெருக்கு சில நாட்கள் தொடர்ந்து நீடித்ததால் விவசாய பயிர்கள், செங்கல் சூளைகளும் நாசமானது. பல இடங்களில் சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. அந்த சமயத்தில் மார்த்தாண்டம் வெட்டுமணியில் இருந்து ஆற்றின் குறுக்கே குழித்துறைக்கு செல்லும் வகையில் அமைந்துள்ள தடுப்பணையின் மீதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே வெட்டுமணியில் இருந்து குழித்துறைக்கு நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வர முடியாமல் தடைபட்டது.

இந்தநிலையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பாதிப்புகள் அனேகமாக குறைந்து விட்டன. சாலை போக்குவரத்துகளும் நடைபெற்று வருவதுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முன்பு போல் நடந்து வருகிறது.

ஆனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணையை மூழ்கடித்தபடி தண்ணீர் தொடர்ந்து செல்கிறது. மழை குறைந்தாலும் அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மூழ்கடித்தபடி தொடர்ந்து தண்ணீர் செல்கிறது.

இந்த நிலையால், வெட்டுமணியில் இருந்து குழித்துறைக்கு தடுப்பணை வழியாக இருசக்கர வாகனங்கள் சென்று வருவதிலும், பொதுமக்கள் நடந்து செல்வதிலும் தொடர்ந்து தடை ஏற்பட்டு வருகிறது. 14-வது நாளாக இருசக்கர வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆற்று பாலம் வழியாக சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்