உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நிலை மோசம்: மாணவி வளர்மதி ஆஸ்பத்திரியில் அனுமதி

புழல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்த மாணவி வளர்மதியின் உடல்நிலை மோசமானதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2018-08-27 21:30 GMT
செங்குன்றம்,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரண நிதி திரட்டுவதற்காக பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் நிதி வசூல் செய்யப்பட்டது.

இதை உளவுப்பிரிவு போலீஸ்காரர் ஸ்டாலின் (வயது 40) என்பவர் தனது செல்போனில் படம் பிடித்தார். இதனால் நிவாரண நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் போலீஸ்காரர் ஸ்டாலினை அடித்து உதைத்தாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த ஸ்டாலின் பெரியமேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதி உள்ளிட்டோரை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

உண்ணாவிரதம்

இதனை தொடர்ந்து வளர்மதி, போலீஸ்காரர் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 25-ந் தேதி காலை திடீரென உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவருக்கு சாப்பிட உணவு வழங்கப்பட்டது.

ஆனாலும் அவர் சாப்பிட மறுத்துவிட்டார். நேற்று 3-வது நாளாக அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். வளர்மதியிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்த நிலையில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த மாணவி வளர்மதியின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து போலீசார் அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு வளர்மதிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவி வளர்மதி ஆஸ்பத்திரியிலும் உணவு ஏதும் சாப்பிடாமல் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்.

மேலும் செய்திகள்