பெலகாவி அருகே பேரல் தண்ணீருக்குள் அமுக்கி 2½ வயது குழந்தை கொலை

பெலகாவி அருகே பேரல் தண்ணீருக்குள் அமுக்கி 2½ வயது குழந்தையை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பெரியம்மா கைது செய்யப்பட்டார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2018-08-27 22:00 GMT
பெங்களூரு,

பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா காகவாட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கடபாலா கிராமத்தை சேர்ந்தவர் ராஜு அலாசி. இவரது மனைவி ரூபா. இந்த தம்பதிக்கு 2½ வயதில் கார்த்திக் என்ற குழந்தை இருந்தது. கடந்த 17-ந் தேதி ராஜு, அவரது மனைவி ரூபா தங்களது குழந்தையை பாட்டியிடம் விட்டுவிட்டு மராட்டிய மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றிருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் குழந்தையை தூங்க வைத்துவிட்டு, அருகில் இருந்த கடைக்கு பாட்டி சென்றார்.

அவர் திரும்பி வந்து பார்த்தபோது தூங்கி கொண்டிருந்த குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் குழந்தையை அவர் அக்கம் பக்கத்தில் தேடியும், விசாரித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி ராஜு, ரூபாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து கடபாலா கிராமத்திற்கு விரைந்து வந்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பேரலை ராஜு திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். பேரலில் இருந்த தண்ணீரில் குழந்தை பிணமாக மிதந்தது. இதுபற்றி அறிந்ததும் காகவாட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தூங்கி கொண்டிருந்த குழந்தை, பேரல் தண்ணீரில் அமுக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் ராஜு வீட்டில் இருந்த நகை, பணமும் கொள்ளை போய் இருந்தது.

அதே நேரத்தில் ராஜுவின் சகோதரர் பாகுபலி அலாசியின் மனைவி ஜெயஸ்ரீ திடீரென்று காணாமல் போய் விட்டார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜெயஸ்ரீயை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தான் குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. உடனே ஜெயஸ்ரீயை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

அதாவது ராஜுவின் சகோதரரான பாகுபலி அலாசி-ஜெயஸ்ரீ தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் ஜெயஸ்ரீக்கு ஆண் குழந்தையின் மீது தான் மோகம் அதிகமாக இருந்துள்ளது. மேலும் ரூபாவுக்கு ஆண் குழந்தை இருப்பதால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஜெயஸ்ரீ, தனக்கு ஆண் குழந்தை இல்லாத ஆத்திரத்தில் ரூபாவின் ஆண் குழந்தையான கார்த்திக்கை பேரலில் இருந்த தண்ணீருக்குள் அமுக்கி கொலை செய்ததுடன், வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

கைதான ஜெயஸ்ரீ மீது காகவாட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்