மசினகுடியில் வாகன சோதனை: கர்நாடகாவை சேர்ந்த கஞ்சா வியாபாரி கைது
மசினகுடியில் கர்நாடகாவை சேர்ந்த கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மசினகுடி,
கர்நாடக மாநிலம் குண்டல்பேட் பகுதியில் இருந்து மதுபானம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நீலகிரி மாவட்டத்துக்கு கடத்தி வரப்படுகிறது. இதை தடுக்க கக்கநல்லா சோதனை சாவடியில் தமிழக மதுவிலக்கு போலீசார் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மசினகுடி பாலம் அருகே நேற்று மாலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கர்நாடக பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்தது.
உடனே அந்த காரை நிறுத்தி, போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் காரில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குண்டல்பேட் அருகே உள்ள மங்கலா கிராமத்தை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி சங்கரா(வயது 32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் ஓட்டி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சங்கராவை கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.