காரைக்குடியில் பரிதாபம்: மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி, 2 பேர் கைது
காரைக்குடியில் இரும்பு வேலியில் துணிகளை காய போட்ட போது மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பரிதாபமாக இறந்துபோனார். அஜாக்கிரதையாக இருந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
காரைக்குடி,
காரைக்குடி ரெயில்வே ரோடு குட்ஷெட் தெருவைச் சேர்ந்தவர் முத்து. இவருடைய மகள் சரண்யா(வயது 18). முத்து இறந்துவிட்ட நிலையில் சரண்யாவும், அவரது தாயாரும் வசித்து வந்தனர். சரண்யா, காரைக்குடியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் வேலை செய்து வந்தார். அவரது வீட்டிற்கும், அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கும் இடையே இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் அருகில் இருக்கும் உறவினர் வீட்டில் மின் வயரிங் வேலை நடந்து கொண்டிருந்தது. நேற்றும் உறவினர் வீட்டில் வயரிங் வேலை நடைபெற்றது. அப்போது சில மின்கம்பிகள் அருகில் இருக்கும் மின் வேலியை தொட்டவாறு கிடந்தது. அத்துடன் மின்கம்பியில் சென்ற மின்சாரம், வேலியிலும் பாய்ந்து கொண்டிருந்தது.
சரண்யா எப்போது இரும்பு வேலியில் துணிகளை காயப் போடுவது வழக்கம். இந்தநிலையில் இரும்பு வேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பது தெரியாமல் நேற்று வழக்கம்போல் சரண்யா துணிகளை காயப்போட்டார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அழகப்பாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் சரண்யாவின் உறவினர்களான அழகம்மை(60), பாலசுப்பிரமணியன்(32) ஆகியோரின் அஜாக்கிரதையால் அவர் இறந்துபோனது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.