பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு 2 வாரத்தில் தூத்துக்குடியில் ஆய்வு
தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு இன்னும் 2 வாரத்தில் தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த 13 பேரின் குடும்பங்களில் யாருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று அவர்களின் உறவினர்களிடம் இருந்து கோரிக்கை பெறப்பட்டது. அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப என்ன பணி கொடுக்கலாம் என்பது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளோம். இதுதொடர்பாக அரசு ஆய்வு செய்து, அதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வர வாய்ப்பு உள்ளது. அரசு தரப்பில் எந்த தாமதமும் இல்லை. முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி அனைவருக்கும் வேலை வழங்கப்படும்.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த பிரின்ஸ்டன் என்பவருக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நவீன செயற்கைகால் பொருத்துவதற்கு அரசு அனுமதி அளித்து, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதேபோன்று விஜயகுமார் என்பவருக்கு தொடையில் எலும்பு துண்டானது. அவருக்கு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்து உள்ளது. இதற்கான செலவை அரசு ஏற்று உள்ளது. அரசு தரப்பிலும், மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் எந்த தாமதமும் கிடையாது.
காயம் அடைந்தவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், உடனடியாக உதவி செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது. ஏற்கனவே ஒருவருக்கு ஆட்டோ, மற்றொருவருக்கு நாட்டுப்படகு வாங்கி கொடுக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அரசின் உதவியை கோரினால் உடனடியாக உதவி செய்யப்படும்.
ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆய்வுக்குழு அமைத்து உள்ளது. அந்த குழுவினர் இன்னும் 2 வாரத்தில் தூத்துக்குடி வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது. புதுக்கோட்டை அருகே உள்ள உப்பாற்று ஓடை பாலத்தின் அருகே ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு மூலம் அந்த பகுதி முழுவதும் சர்வே செய்யப்படுகிறது. இந்த கழிவுகளால் அதிக மழை வரும்போது பாதிப்பு ஏற்படுமா? என்று ஆய்வு செய்யப்படுகிறது. தேவைப்பட்டால், அந்த பகுதியில் போடப்பட்டு உள்ள சுற்றுச்சுவரை இடித்து விட்டு, சிறிது தூரம் தள்ளி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
புன்னக்காயலில் சுமார் ரூ.50 கோடி செலவில் ரெகுலேட்டர் அணை அமைப்பதற்கான ஆய்வு நடந்து வருகிறது. முக்காணி தடுப்பணை நல்ல நிலையில் உள்ளது.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.