தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் குழந்தை சாவு

கண்டமங்கலம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் குழந்தை இறந்தது.

Update: 2018-08-27 21:45 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த சித்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி கீதாலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. யோகஸ்ரீ என்ற 10 மாத குழந்தை இருந்தது.

இந்நிலையில் கடந்த 25–ந் தேதி காலை ராஜா வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி கீதாலட்சுமி தனது குழந்தை யோகஸ்ரீயை வீட்டினுள் படுக்க வைத்துவிட்டு பின்புறம் உள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்றார்.

அப்போது குழந்தை யோகஸ்ரீ தவழ்ந்து கொண்டே வந்து வீட்டு வாசல் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதில் தண்ணீரில் மூழ்கிய குழந்தைக்கு மூச்சு திணறியது.

இதனிடையே குளித்து விட்டு வெளியே வந்த கீதாலட்சுமி, தனது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே குழந்தையை மீட்டார். பின்னர் குழந்தையை உறவினர்கள் உதவியுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்