மங்களமேடு அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி கட்டையால் அடித்து கொலை முதியவர் கைது

மங்களமேடு அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-27 23:00 GMT
மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா மங்களமேடு அருகே உள்ள அத்தியூர் காலனி தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 61). இவருடைய மனைவி அஞ்சலை(51). இவர்களுக்கு ராஜா என்ற மகனும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். மகன், மகளுக்கு திருமணமாகி விட்டது. ராஜா சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் நடராஜன் தனது மனைவி அஞ்சலையுடன் வசித்து வந்தார். நடராஜன் பழைய பேப்பர், பாட்டில்களை சேகரித்து, அதனை விற்று கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் நடராஜன், அஞ்சலையின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.


இதில் ஆத்திரமடைந்த நடராஜன் அருகே கிடந்த கட்டையை எடுத்து அஞ்சலையை தாக்கினார். இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த அஞ்சலை ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மங்களமேடு போலீசார், அஞ்சலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தார். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை முதியவர் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்