மொடக்குறிச்சி அருகே இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர் தற்கொலை: மாணவ –மாணவிகள் மீண்டும் போராட்டம்

மொடக்குறிச்சி அருகே இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவ –மாணவிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-27 23:30 GMT

மொடக்குறிச்சி,

ஈரோடு மாவட்டம் கொடுமுடி நடுப்பாளையம் அருகே உள்ள சாணார்புதூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 20). இவர் மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் பாரதியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3–ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் கல்லூரி மாணவர்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக தினேஷ்குமார் கல்லூரியில் இருந்து 15 நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

எனவே அவரது சாவுக்கு காரணமான கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 24–ந் தேதி மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு வந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதுதொடர்பாக மாணவ–மாணவிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்தார்கள்.

மாணவ–மாணவிகள் போராட்டம் காரணமாக நேற்று கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாணவ–மாணவிகள் சுமார் 200 பேர் மீண்டும் போராட்டம் நடத்துவதற்காக நேற்று பகல் 11.30 மணி அளவில் கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தினேஷ்குமார் சாவுக்கு காரணமான கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

மேலும் கோ‌ஷங்களும் எழுப்பினார்கள். பின்னர் கல்லூரி நுழைவுவாயிலை திறந்து உள்ளே நுழைந்தனர். அங்கு தரையில் உட்கார்ந்து மாணவ–மாணவிகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார், மொடக்குறிச்சி தொகுதி சிவசுப்பிரமணியம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவ–மாணவிகளுடன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் கூறும்போது, ‘இன்னும் 10 நாட்களுக்குள் கல்லூரி முதல்வர், சம்பந்தப்பட்ட பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தி உண்மை நிலை கண்டறியப்படும். தவறு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள். நாளை (அதாவது இன்று) முதல் கல்லூரிக்கு திரும்புங்கள்’ என்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட மாணவ–மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து மதியம் 1 மணி அளவில் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்