காவலர் பணிக்கான வயது வரம்பினை 24 ஆக உயர்த்த நடவடிக்கை - நாராயணசாமி தகவல்

காவலர் பணிக்கான வயது வரம்பினை 24 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-08-27 00:45 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கேரள மாநில வெள்ள நிவாரணத்துக்கு ஏற்கனவே அறிவித்தபடி அரசு ஊழியர்கள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம் சுமார் ரூ.10 கோடி வரை வசூலித்து அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள், தொண்டு நிறுவனங்களிடம் இருந்து சுமார் ரூ.25 லட்சம் பெறப்பட்டுள்ளது.

கேரள மக்கள் பல்வேறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். நேபாள நாட்டில் பூகம்பம் ஏற்பட்டபோது இந்தியா உதவியது. இதுபோன்ற நேரங்களில் வெளிநாட்டு உதவியானது பரஸ்பரம் இயல்பானது. எனவே அதை பெற தடை இருக்கக்கூடாது.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது ரபேல் விமானம் ஒன்றுக்கு ரூ.576 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் கடந்த 2015–ம் ஆண்டு விதிமுறைகளை மீறி ரூ.1,760 கோடி என்று விமானங்களை வாங்கியுள்ளனர். இதுதொடர்பான விவகாரங்கள் ராணுவ ரகசியம் என்று அதை வெளியிட ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமன் மறுக்கிறார். தனியாருக்கு ஆதரவாகவே பிரதமரும் செயல்படுகிறார்.

நமது மாநிலத்தில் அரசு சார்பு, தன்னாட்சி நிறுவனங்களுக்கு தொடர்ந்து மானியங்களை தருகிறோம். ஆனால் அவை நஷ்டத்திலேயே இயங்கி வருகின்றன. அவற்றை மீட்டெடுக்க அரசு செயலாளர் விஜயன் தலைமையில் குழு அமைத்துள்ளோம். அந்த குழுவின் பரிந்துரைப்படி அமைச்சரவையில் முடிவு செய்து நடவடிக்கை எடுப்போம்.

புதுவையில் காவலர்கள் தேர்வு 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. இதில் கலந்துகொள்ள நிறைய இளைஞர்கள் தயாராக உள்ளனர். இதற்கான வயது வரம்பினை 22–ல் இருந்து 24 ஆக உயர்த்த கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி.யை அழைத்து பேசினேன். அதைத்தொடர்ந்து வயதுவரம்பினை 24 ஆக உயர்த்தி நடவடிக்கை எடுக்க கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் பாலசேவிகா, ஆரம்பப்பள்ளி ஆசிரியர், கணினி ஆசிரியர், பயிற்சிபெற்ற பட்டதாரி ஆசிரியர், மொழி ஆசிரியர், விரிவுரையாளர்கள் என 392 பேரை தேர்வு செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான தேர்வும் விரைவில் நடைபெறும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, கருணாநிதி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைவர். அவரது நினைவஞ்சலி கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொள்வது சர்ச்சைக்குரிய வி‌ஷயமல்ல. தி.மு.க. தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்துள்ள மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்கள். அவரது தலைமையில் தி.மு.க. வலுப்பெறும் என்று தெரிவித்தார்.

பேட்டியின்போது முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

மேலும் செய்திகள்