கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி: கொள்ளையனை மடக்கி பிடித்தவருக்கு கத்திக்குத்து

கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற கொள்ளையனை மடக்கி பிடித்தவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2018-08-26 23:56 GMT

கோவை,

கோவை சுங்கம் அருகே உள்ள சிவராம்நகரில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் கோவில் உண்டியலை உடைத்தனர். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

இதை பார்த்த கொள்ளையர்கள் தப்பி ஓடினர். அதில் ஒரு கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் தான் கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியால் தன்னை பிடித்த கிருஷ்ணகுமார் (வயது 40) என்பவரன் மார்பில் குத்தினான். இதில் அவர், ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அந்த கொள்ளையன் தப்பி ஓடினான். ஆனால் அவனை விடாமல் பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி ராமநாதபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர், சவுரிபாளையத்தை சேர்ந்த ருத்ரன் (26) என்பதும், அங்குள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து நகை பணத்தை திருடி விட்டு, பத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து திருடும் போது பொதுமக்களிடம் சிக்கி கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து சூலக்கல் மாரியம்மன் கோவிலில் திருடிய பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை ருத்ரனிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ருத்ரன் மீது பல திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவருடன் வந்த கூட்டாளி சக்தி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த கிருஷ்ணகுமார் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் கோவை சுங்கம் பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்