‘ஹலோ போலீஸ்’ திட்டத்தில் 150 புகார்கள் மீது நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ‘ஹலோ போலீஸ்’ திட்டத்தில் 150 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி, துரித சேவைக்காக மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் ‘ஹலோ போலீஸ்‘ என்னும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக 95141 44100 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண்ணில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். அதே போன்று வாட்ஸ்-அப்பிலும் புகார்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் பெறப்படும் புகார்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பவர்களின் விவரம் தெரிவிக்க வேண்டியது இல்லை. இதில் பொதுமக்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
அதன்படி இந்த ‘ஹலோ போலீஸ்‘ திட்டத்தின் கீழ் கடந்த 4-7-2018 முதல் நேற்று முன்தினம் வரை செல்போன் எண்ணுக்கு மொத்தம் 150 புகார்கள் வந்தன. அந்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. இதில் 128 புகார்கள் நேரடியாகவும், ஒரு எஸ்.எம்.எஸ், 21 வாட்ஸ்-அப் புகாரும் வந்து உள்ளன. இதில் மதுபாட்டில்கள் கடத்தல், மணல் கடத்தல், திருட்டு வழக்கு சம்பந்தப்பட்ட தகவல், லாட்டரி சீட்டு விற்பனை போன்ற பல சட்டவிரோத நடவடிக்கை குறித்து புகார்கள் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
அதே போன்று சாலை விபத்து, குடும்ப பிரச்சினை, அடி, தடி, தகராறு போன்ற பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்களும் இந்த செல்போனுக்கு தகவல் தெரிவித்து பயன் அடைந்து உள்ளனர்.
எனவே மக்கள் இந்த ‘ஹலோ போலீஸ்‘ எண்ணை தொடர்பு கொண்டு போலீசின் விரைவான சேவையை பெற்று பயன் அடையலாம்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தெரிவித்து உள்ளார்.