ஸ்டெர்லைட் நிர்வாகத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஆதரிக்கின்றன

ஸ்டெர்லைட் நிர்வாகத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஆதரிக்கின்றன என்று திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார்.;

Update: 2018-08-26 22:00 GMT
தூத்துக்குடி, 


தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த ஆணை பலவீனமானது. சுற்றுச்சூழல் பாதிப்பு என்பதை மட்டும் காரணம் காட்டி ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டதால், அது சட்டப்படியான வலுவை கொண்டிருக்கவில்லை.
மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரை திடீரென தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து இருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. அவர், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது, திறக்க அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்து இருக்கிறார். அவரை தமிழக அரசு திடீரென மாற்றி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு முதல்-அமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.


தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தலைவராக இருக்கும் ஏ.கே.கோயல், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி ஒருவரின் தலைமையில் சுற்றுச்சூழல் நிலைமை குறித்து ஆராய்வதற்கு ஆய்வுக்குழு அமைத்து இருக்கிறார்.
ஆலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழர் அல்லாத, தமிழ்நாட்டை சேராத ஒருவரை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்து உள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஆதரிக்கின்றன. அதனை விரைவில் திறப்பதற்கு இரு அரசுகளுமே துணையாக இருக்குமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்